லண்டன்,
கிரிக்கெட் உலகில் இலங்கையின் முத்தையா முரளிதரன், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே மகத்தான ஸ்பின்னர்களாக போற்றப்படுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து இந்தியாவின் அனில் கும்ப்ளே சிறந்த ஸ்பின்னராக போற்றப்படுகிறார். ஏனெனில் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே ஆகியோருக்குப் பின் கும்ப்ளே உலகின் 3வது சிறந்த ஸ்பின்னராக சாதனை படைத்துள்ளார்.
அவர் விளையாடிய காலகட்டங்களில் இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராக விளையாடிய அவர் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அவர் 10 விக்கெட்டுகளையும் எடுத்து உலக சாதனையுடன் இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
இந்நிலையில் தம்மை பொறுத்த வரை ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன் ஆகியோருக்கு பின் அனில் கும்ப்ளே சிறந்த ஸ்பின்னர் கிடையாது என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் லாயிட் தெரிவித்துள்ளார். மாறாக பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர் அப்துல் காதர் தான் 3-வது சிறந்த ஸ்பின்னர் என்று அவர் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “பாகிஸ்தானின் அப்துல் காதர் அழகான பவுலர். அற்புதமான கலைஞர். அவருடைய ரிதம் மற்றும் ஆக்சன் சிறப்பாக இருக்கும். பந்து வீசிக் கொண்டிருக்கும்போது அவரது மணிக்கட்டு மிகவும் கீழே இருக்கும். எனவே ஷேன் வார்னே மற்றும் முத்தையா முரளிதரனுக்கு பின் அவர் எனது பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். அதேவேளை அனில் கும்ப்ளே உயரமானவர் வேகமாக வீசக்கூடியவர். அவர் கைகளை அதிகமாக பயன்படுத்துகிறார். அவரிடம் ஸ்பின்னர்களுக்கு உண்டான ஒரு வளையம் இல்லை. அவருடைய பந்துகள் மிகவும் அதிக உயரத்தில் வருகிறது” என்று கூறினார்.