பால் கனகராஜிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் துப்பு துலக்கும் பணி தீவிரம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் துப்பு துலக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பால் கனகராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும் போலீஸார் விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தமிழக இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த (தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட) வியாசர்பாடி எஸ்.எம்.நகரைச் சேர்ந்த அஸ்வத்தாமன் (32) கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். மேலும், கொலை பின்னணியில், வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள அவரது தந்தை பிரபல ரவுடியான நாகேந்திரன் இருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியானது. அவரையும் போலீஸார் கைது செய்தனர். இதனால், கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.

இதன் தொடர்ச்சியாக பாஜக மாநில துணைத்தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான பால்கனகராஜை கடந்த வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். 7 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில், பால்கனகராஜ் அளித்த தகவல்களை போலீஸார் பதிவு செய்து வைத்துக் கொண்டனர். பின்னர், வெளியே வந்த பால் கனகராஜ் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தனக்கும் துளி அளவு கூட சம்பந்தம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இருந்தாலும், அவர் அளித்த பல்வேறு தகவல்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை முன்னோக்கி எடுத்துச் செல்ல உதவியாக இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அதாவது, பால் கனராஜ் 35 ஆண்டுகளாக வழக்கறிஞராக உள்ளார். பல்வேறு தரப்பினருக்கு ஆதரவாக அவர் வாதாடி உள்ளார். அதில், குற்ற பின்னணி தொடர்புடையவர்களும் உள்ளனர். அதுகுறித்த தகவல்களை சேகரித்த போலீஸார் அதை அடிப்படையாக வைத்தும் விசாரணை வளையத்தை விரிவு படுத்தி உள்ளனர்.

மேலும், சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை போலீஸ் காவலில் எடுப்பதற்கான நடவடிக்கையையும் போலீஸார் எடுத்துள்ளனர். இதுஒருபுறம் இருக்க போலீஸாருக்கு சவால் விடுக்கும் வகையில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள பிரபல ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தேடும் பணியையும் போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.