மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதுகலை மருத்துவ மாணவி சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவ மாணவியின் உடல் கூறாய்வு செய்யப்பட்டதில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, விசாரணையை தொடங்கியது. மாணவியின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதில் பங்கெடுக்க பா.ஜ.க முயன்றபோது, மருத்துவ வளாகத்துக்குள் அரசியலை அனுமதிக்க மாட்டோம் என மாணவர்கள் மறுத்துவிட்டனர். இந்த நிலையில், பா.ஜ.க-வின் மாணவர் பிரிவும், சிபிஐ கட்சியும், “காவல்துறை விசாரணையில் திருப்தி இல்லை. இந்த வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்” என போராட்டத்தை முன்னெடுத்தன. இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக தன்னார்வ தொண்டராக அறியப்படும் சஞ்சோய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக பேசிய காவல்துறை, “குற்றம் நடந்த இடத்தில் சஞ்சோய் ராய் தனது புளூடூத் ஹெட்போனை விட்டுச் சென்றிருந்தார். இதுதான் அவரைக் கைதுசெய்ய வழிவகுத்தது. சி.சி.டி.வி காட்சிகளில் அவர் இருக்கும் ஆதாரங்கள் இருந்தாலும், இந்த புளூடூத் ஹெட்போன் முக்கிய ஆதாரமாக சிக்கியது.
கைரேகை உள்ளிட்ட பிற ஆதாரங்களையும் திரட்டியிருக்கிறோம். வெளிப்படையான விசாரணை செயல்முறையை பின்பற்றுகிறோம். குடும்ப உறுப்பினார்களுக்கு எங்கள் விசாரணையில் திருப்தி இல்லையென்றால் அவர்கள் விரும்பும் விசாரணை ஏஜென்சி மூலம் விசாரிக்கட்டும். எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
இந்த கைது நடவடிக்கைக்குப் பிறகு பா.ஜ.க தலைவர் சுகந்தா மஜும்தார், “விசாரணை போதுமானதாக இல்லை. கைது நடவடிக்கை ஒரு கண்துடைப்பு செயலாகும். சிபிஐ விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதியை வழங்க முடியும்” என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த, திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி, “பாலியல் வன்கொடுமை விவாகரத்தின் மூலம் மலிவு அரசியல் செய்வதற்கு பதிலாக, பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்களை விரைவாக விசாரிக்க பா.ஜ.க அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும். எதிர்க்கட்சியாக நாங்கள் அதை ஆதரிப்போம். இது போன்ற குற்றவாளிகளுக்காக பல ஆண்டுகளாக தொடரும் விசாரணையும், அதற்காக வீணாக்கப்படும் பணத்துக்கும் எந்த அர்த்தமும் இல்லை.” என்று கூறினார்