‘கூழாங்கல்’ திரைப்படம் பல அங்கீகாரங்களை இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜுக்குப் பெற்றுத் தந்தது. கிராமப் புறங்களில் நடக்கும் ஆணாதிக்கத்தையும், பெண்களில் நிலையையும் கண் முன் காட்சிப்படுத்திப் பாராட்டுக்களைப் பெற்றிருந்தது.
இதற்குப் பிறகு, இவர் சூரியை வைத்து இயக்கியிருக்கிற ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பெர்லின், ரோட்டர்டேம் ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. இத்திரைப்படத்தில் சூரியுடன் மலையாள நடிகை அனா பென் நடித்திருக்கிறார். இதுதான் இவர் நடிக்கும் முதல் தமிழ்த் திரைப்படம். சாதி, ஆணாதிக்கத்தைப் பற்றிய இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படத்தின் இயக்குநர் லெனின் பாரதி இப்படத்தை சமீபத்தில் பார்த்து வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “கொட்டுக்காளி… குடும்பம், சாதி, மதம் ஆகிய ஆணாதிக்க அமைப்புகள் காலங்காலமாய் பெண்ணுலகின் மீது நிகழ்த்தும் வன்மம், வக்கிரம், கயமைகளின் பெரும் பயணம்… முத்தங்கள்டா பிஎஸ் வினோத்ராஜ். இப்படியானப் படைப்பைத் தயாரித்த சிவகார்த்திகேயன், நடித்த சூரி மற்றும் குழுவினருக்கும் கோடி நன்றிகள்” என்று பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார்.