பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
‘சேது’ தொடங்கி தற்போது ‘தங்கலான்’, ‘வீர தீர சூரன்’ வரை தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் புதுப்புது பரிணாமங்கள் எடுத்து, முழுமையாகத் தன்னையே அர்பணித்து நடித்து வருபவர் விக்ரம். ஒவ்வொரு திரைப்படங்களிலும் அவரது அர்பணிப்பைப் பார்த்து மெய் சிலிர்க்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்.
முதல் படத்திலிருந்து இன்று வரை அவரது இந்தத் தேடலும், அர்பணிப்பும் கொஞ்சம்கூட குறையவில்லை. சினிமாவை அவ்வளவு தூரம் நேசப்பவர். தற்போது அவர் ‘தங்கலான்’ படத்திலும் அப்படிப்பட்ட அர்பணிப்பையே செலுத்தி நடிப்பால் அசர வைக்கவிருக்கிறார். இப்படத்தின் வெளியீட்டையொட்டி பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்று வருகின்றனர் படக்குழு. அவ்வகையில் மதுரையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒருவர் விக்ரமிடம், ‘ஒவ்வொரு முறையும் சிறந்த நடிப்பைக் கொடுத்து அசர வைக்கிறீர்கள். ஆனால், விஜய், அஜித், சூர்யாவிற்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் உங்களுக்குக் குறைவாக இருப்பது ஏன்?’ என்று கேள்வி கேட்டார்.
அதற்குப் பதிலளித்த நடிகர் விக்ரம், “என்னோட ரசிகர்கள் பட்டாளம் பற்றி உங்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. ‘தங்கலான்’ படம் வெளியாகும்போது தியேட்டருக்கு வந்து பாருங்கள் என் ரசிகர்கள் பட்டாளம் என்னவென்று உங்களுக்குத் தெரியும். டாப் 3, 4, 5 என்ற நம்பர் கணக்கெல்லாம் எனக்குத் தெரியாது. அதுபற்றி எனக்குக் கவலையுமில்லை. சினிமாவை நேசிக்கும் அனைவரும் என்னுடைய ரசிகர்கள்தான்.
‘தூள்’, ‘சாமி’ போன்ற ரசிகர்களை ஈர்க்கும் படங்களை நான் பண்ணியிருக்கிறேன். அதுபோன்ற படங்களும் எனக்குப் பண்ணத் தெரியும். ஆனால், சினிமாவில் என் தேடல் என்பது வேறு. புதுப்புது பரிணாமங்களில், புதுபுது கதைகளில் நடிப்பது, நம்முடைய சினிமாவை உயர்ந்த தளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. என்னுடைய படங்களில் குறை சொல்லும்படி நான் நடித்திருக்க மாட்டேன். ‘ராவணன்’ படம் இந்தியில் எடுத்து சரியாக ஓடவில்லை. இருந்தாலும், எங்கள் வீட்டில் ‘ராவணன்’ படம் தான் என்னுடைய சிறந்த படம் என்று கூறுவார்கள்.
இப்போது ‘தங்கலான்’, ‘வீர தீர சூரன்’ என ஒவ்வொரு படத்தையும் என் சினிமா வாழ்வின் சிறந்த படங்களாக்கத் தொடர்ந்து முழு அர்பணிப்புடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். நம்முடைய சினிமாவை அடுத்தடுத்தத் தளத்திற்குக் கொண்டு செல்ல நான் முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன். அதுதான் எனது பாணி. எனக்கான ரசிகர்களை நீங்கள் தியேட்டருக்கு வந்து பாருங்கள், உங்களுக்குத் தெரியும். விஜய், அஜித், சூர்யா அளவிற்கு எனக்கு ரசிகர்கள் இல்லை என்று சொல்கிறீர்கள். ஒருநாள் இதே கேள்வியை நீங்கள் அவர்களிடம் கேட்பீர்கள்” என்று பதிலளித்துள்ளார். இது தொடர்பானக் காணொலி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.