சென்னை: கொல்கத்தா மருத்துவ மாணவி கொலையில் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் 2-ம் ஆண்டு மருத்துவ மாணவி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதை ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. கல்லூரி வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை மேற்கு வங்க அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.
மேற்கு வங்க முதல்வரும். சுகாதாரத்துறை செயலாளரும் இந்த சம்பவத்துக்கு உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மேலும், மேற்கு வங்க மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை மேற்கு வங்க அரசு உறுதி செய்ய வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், அகில இந்திய மருத்துவ சங்கங்களுடன் இணைந்து இந்திய அளவில் மிகப்பெரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.