மும்பை,
டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்றனர். டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற அவர்கள் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாக தெரிவித்து இருந்தார்கள்.
ஆனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கவுதம் கம்பீர் சமீபத்திய இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர்களில் ஜடேஜாவை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை. இதனிடையே ஜடேஜாவின் ஒருநாள் கேரியர் இன்னும் முடிந்து விடவில்லை என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானுக்கு வெளியே துபாய் அல்லது இலங்கையில் நடைபெற்றால் ரவீந்திர ஜடேஜா விளையாட வாய்ப்புள்ளதாக இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- “சாம்பியன் டிராபியில் அக்சர் படேலுடன் ரவீந்திர ஜடேஜாவும் இருப்பார் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர்கள் இருவரும் டி20 உலகக்கோப்பையில் ஒன்றாக விளையாடினர். மறுபுறம் பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாடுமா? அதற்கு வாய்ப்பில்லை. அது போன்ற சூழ்நிலையில் துபாய் அல்லது இலங்கையில் இந்தியா விளையாடும்.
ஒருவேளை அங்கே நாம் விளையாடினால் நமக்கு விரல் ஸ்பின்னர்கள் தேவை. அது போன்ற சூழ்நிலையில் அந்த இருவருமே விளையாடுவார்கள் என்று நான் நினைக்கிறேன். எனவே அக்சர் – ஜடேஜா ஆகிய இருவருமே தேர்வாக வாய்ப்புள்ளது. ஆனால் தற்சமயத்தில் அக்சர் படேல் தமக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளிலும் நன்றாக செயல்பட்டு வருகிறார். மறுபுறம் அவரை விட ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்படவில்லை. அதுதான் தற்போதைய நிலையாக இருக்கிறது” என்று கூறினார்.