புதுடெல்லி: வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அங்கு இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை பாதுகாக்கும் நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறி்த்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும், அவர்களது சொத்துகள் மற்றும் மதவழிபாட்டு தலங்கள் ஆகியவற்றின் மீது குறிவைத்து தாக்கப்படுவது மிகவும் கவலை அளிக்கும் செயல்.இந்தசூழ்நிலையில், தற்போதுவங்கதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசு சிறுபான்மை சமூகங்களுக்கு இடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் என்பதே காங்கிரஸின் எதிர்பார்ப்பு.
வங்கதேச சிறுபான்மையினர் பாதுகாப்பு, கண்ணியம், மத நல்லிணக்க சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வலுவான நடவடிக்கைகளை இடைக்கால அரசு துரிதப்படுத்தும் என்ற நம்பிக்கை காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான வங்க தேசத்தில் இந்துக்கள் உள்ளிட்டசிறுபான்மையினர் தாக்கப்படுகின்றனர். அந்த அட்டூழியங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்காமல் மவுனமாக இருப்பது துரதிஷ்டவசமானது என பாஜக கடந்த வெள்ளிக்கிழமை விமர்சனம் செய்தது. இந்த நிலையில்தான், சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என வங்கதேச இடைக்கால அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.