சேலம் அரசு மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு பிறந்து ஐந்தே நாள்களான ஆண் குழந்தை காணமல் போனது. இதுதொடர்பாக மாநகர காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிரமாக செயல்பட்டதன் மூலம் 12 மணிநேரத்தில் குழந்தையை கடத்திய நபரிடமிருந்து குழந்தையை மீட்டனர். இதில், குழந்தை கடத்தலில் ஈடுப்பட்டது காரிபட்டி பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான வினோதினி என்பது தெரியவந்தது. இவர் சேலம் அம்மாபேட்டை பகுதியில் இயங்கிவரும் கல்லூரியில் லேப் அசிஸ்டண்டாக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் தனியார் ஐஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் வினோதினிக்கு கடந்த ஆண்டு திருமணமாகி கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கு இடையில் கருக்கலைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை வீட்டில் சொல்ல முடியாமல் இருந்த வினோதினி, குழந்தையை திருடி அதனை தன் குழந்தை என உறவினர்களிடம் காண்பித்துக்கொள்ளலாம் என நினைத்துள்ளதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் மேலும் அதிர்ச்சியூட்டும் சம்பவமாக குழந்தை கடத்தலில் ஈடுபட்ட வினோதினி, குழந்தையை கடத்திய உடன் வாழப்பாடி பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அட்மிசன் போடப்பட்டுள்ளது. சம்பவத்தன்று காலை 11.30 மணிக்கு அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்படும் குழந்தைக்கு 1 மணியளவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறது.
ஆனால் மாநகர காவல் துறை மூலம் 12.15 மணிக்கெல்லாம் குழந்தை காணவில்லை என அறிவிப்பு வெளியாகியது. அதற்கு முன்னதாக ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இச்செய்தி பரவத்தொடங்கியது. ஆனால், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் இச்செய்தியினைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளிக்காமல், வினோதினியை ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து காரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தனிப்படை போலிஸார், “கடத்தலில் ஈடுபட்ட வினோதினிக்கு ஆண் நண்பர் ஒருவர் இருந்து வந்ததாகவும், அவர் மூலம் தான் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது. மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் கருக்கலைப்பு, கருவின் பாலினம் கண்டறிந்து சொல்வது போன்ற பல்வேறு வழக்குகள் இருந்து வருகிறது. தற்போது இச்சம்பவம் அறங்கேறியிருப்பது, இதில், கடத்தலில் மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும் சம்பந்தம் இருக்குமோ என்கிற சந்தேகத்தை கிளப்பி வருகிறது” என்றனர்.
இதுகுறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபுவிடம் பேசியபோது, “கடத்தலில் ஈடுப்பட்ட பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கான காரணம் என்ன? குழந்தை கடத்தல் சம்பவம் நடந்திருப்பது அனைத்து ஊடகங்கள் வாயிலாகவும் தெரியவந்தும் அதனை காவல்துறைக்கு தெரிவிக்காமல் விட்டது எதற்கு? என்ற விசாரணை சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் நடைபெற்று வருகிறது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88