ஜார்ஜ் சோரஸின் ஏஜென்ட் ராகுல் காந்தி- பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அமெரிக்காவை சேர்ந்த பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹிண்டன்பர்க்’ கடந்த 10-ம்தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியின் தலைவர் மாதபி, அவரது கணவர் தவல் ஆகியோர் அதானியின் சகோதரர் வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனத்தில் பங்குகளை வைத்திருந்தனர். இதன் காரணமாகவே சந்தேகத்துக்குரிய நிறுவனங்கள் மீது செபி நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கூறப்பட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்று செபி தலைவர் மாதபி விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறியதாவது: அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ், இந்தியாவுக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு அவரே பெருமளவில் நிதியுதவி செய்கிறார். அவரது தூண்டுதலின்பேரில் ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது.

தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸின் ஏஜென்டாக ராகுல் காந்தி செயல்படுகிறார். பிரதமர் மோடி மீதான வெறுப்பால் தாய்நாட்டுக்கு எதிராக ராகுல் செயல்படுகிறார். அரசியல் ஆதாயத்துக்காக சொந்த நாட்டின் நலனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது.

இவ்வாறு ரவிசங்கர் கூறினார்.

யார் இந்த ஜார்ஜ் சோரஸ்? ஹிண்டன்பர்க் விவகாரத்தில் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் (94) மீது பாஜக பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது. ஓபன் சொசைட்டி ஃபவுண்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் இவர், பல்வேறு நாடுகளின் அரசியலில் திரைமறைவாக செயல்பட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக ஓராண்டில் அவர் ரூ.12,000 கோடி வரை செலவிடுவதாகவும், இந்தியா உட்பட 120 நாடுகளின் அரசியலில் அவர் தலையிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கதேசத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கும் இவர்தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ‘‘சோரஸ் ஒரு ஆபத்தான பணக்காரர்’’ என்று பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.