துலிப் டிராபி தொடரில் ரோஹித், விராட்… ஆனால் இந்த வீரருக்கு மட்டும் ஓய்வு – ஏன் தெரியுமா?

India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகும் இந்திய அணி அதன் ஐசிசி கோப்பை வேட்டையில் இன்னும் தீவிரமாகி உள்ளது எனலாம். இதனால் இந்திய அணி பல்வேறு மாற்றங்களுக்கும் உள்ளாகி வருகிறது. டி20 உலகக் கோப்பைக்கு பின் ரோஹித் சர்மா (Rohit Sharma), விராட் கோலி (Virat Kohli), ஜடேஜா உள்ளிட்டோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றதை அடுத்து இவர்கள் டெஸ்ட் மற்றும் ஓடிஐ போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். 

அதிலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிய பின்னர் கௌதம் கம்பீர் (Gautam Gambhir) அவரது இடத்தை நிரப்பி உள்ளார். அந்த வகையில் கௌதம் கம்பீர் – ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு அடுத்து காத்திருக்கும் இரண்டு இலக்குகள் என்றால், அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியும், அடுத்தாண்டு ஜூன் மாதம் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையும்தான்… 

11 டெஸ்ட் போட்டிகள்…

இந்த இரண்டு கோப்பைகளை கைப்பற்றும்பட்சத்தில் மூன்று பார்மட்களிலும் இந்திய அணி (Team India) தலைசிறந்து விளங்கும். அதுமட்டுமின்றி சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு இந்த இரண்டு தொடர்களுக்கு பின் அணியில் பெரிய எதிர்காலம் இருக்காது என்பதும் இங்கு நினைவுக்கூரத்தக்கது. எனவே, இந்த இரண்டு கோப்பைகளையும் வெல்ல இந்திய அணி கடுமையாக உழைக்கும் எனலாம். அதிலும் குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தங்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டுவார்கள் எனலாம்.

சமீபத்தில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (IND vs SL ODI) 0-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்து அதிர்ச்சியளித்துள்ளது. இதன்மூலம், இந்திய ஓடிஐ அணியில் உள்ள பிரச்னைகளை தீர்க்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரை இந்திய அணிக்கு வெறும் 3 ஓடிஐ போட்டிகள் மட்டுமே இருப்பது துரதிருஷ்டவசமானது. ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குள் 11 டெஸ்ட் போட்டிகளையும், 8 டி20 போட்டிகளையும் இந்திய அணி விளையாட இருக்கிறது.

டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டர்

எனவே, இந்திய டெஸ்ட் அணியின் மீதுதான் பலரின் கவனமும் திரும்பியிருக்கிறது. டெஸ்டிலும் சரி, ஓடிஐயிலும் சரி மிடில் ஆர்டர் பிரச்னை இருக்கிறது. டெஸ்டை பொறுத்தவரை ரோஹித் சர்மா – யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்நாட்டு தொடர்களிலும், வெளிநாட்டு தொடர்களிலும் பொருத்தமாக இருப்பார்கள். அதில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. 

விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோரும் நிச்சயம் அணியில் இருப்பார்கள். பும்ரா – சிராஜ் – ஷமி ஆகியோர் வேகப்பந்துவீச்சிலும், அஸ்வின் – ஜடேஜா ஆகியோருக்கும் இடம் கிடைக்கும் எனலாம். ஷமி தற்போது பெங்களூருவில் உள்ள என்சிஏவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். செப். 19ஆம் தேதிதான் டெஸ்ட் சீசன் தொடங்குகிறது என்பதால் இன்னும் நிறைய காலம் இருக்கிறது. 

துலிப் டிராபி 2024

அந்த வகையில், பேட்டிங்கிலேயே இந்தியாவுக்கு பிரச்னை இருக்கிறது. எனவே, அந்த பிரச்னையை தீர்ப்பதற்கு பிசிசிஐ அதிரடி திட்டத்தில் இறங்கியிருக்கிறது. ஏற்கெனவே, அஜித் அகர்கர் அணி தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்ற பின்னர் உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். இந்தாண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஜத் பட்டிதார், துருவ் ஜூரேல், சர்ஃப்ராஸ் கான், தேவ்தத் படிக்கல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், டெஸ்ட் அணியில் விளையாடும் அனைத்து வீரர்களும் உள்ளூர் தொடரான துலிப் டிராபியில் (Duleep Trophy 2024) விளையாடியாக வேண்டும் என இலங்கை – இந்தியா தொடருக்கு முன் கம்பீர், அகர்கர் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தனர். 4 அணிகள் பங்கேற்கும் இந்த உள்ளூர் தொடர் வரும் செப். 5ஆம் தேதி தொடங்கி செப். 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரின் 4 அணிகளின் ஸ்குவாடுகளையும் இந்திய சீனியர் அணியின் தேர்வுக்குழு தேர்வு செய்யும்.

Who should be the Captains of India A, B, C, D in Duleep Trophy 2024? pic.twitter.com/0NT9LTAoIP

— Johns. (@CricCrazyJohns) August 12, 2024

துலிப் டிராபியில் சீனியர் வீரர்கள்

இதில், விராட் கோலி, ரோஹித் சர்மா, ஆகியோரும் விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி, சுப்மான் கில், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் உள்ளிட்டோரும் விளையாடும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படலாம். மேலும், இந்திய அணியின் ஒப்பந்தத்தில் இல்லாத இஷான் கிஷனுக்கும் பிசிசிஐ ஒரு வாய்ப்பை வழங்கும் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் அஜிங்கயா ரஹானே மற்றும் செதேஷ்வர் புஜாரா உள்ளிட்ட சீனியர்களுக்கு இந்த தொடரில் இடம் இருக்காது என்றும் கூறப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.