தோல் நோய்கள் வராமல் தடுக்க – நோய் அணுகா விதிமுறைகள்… | சரும நலம்

பொதுவாக நோய்களிலிருந்து விடுபடுதல் என்பதை விட நோய்கள் வராமல் வருமுன் காப்பதே சிறந்தது. அதிலும் தோல் நோய்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

வந்தபின் அதிலிருந்து மீள்வது கடினமானதாக இருப்பதால், வராமல் காப்பதுதான் மிகச் சிறப்பானது.

வருமுன் காப்போம் [Prevention is better than cure]

வருமுன் காக்க, அதாவது நோய்கள் வராமல் தடுக்க, “நோய் அணுகா விதிமுறைகள்” என்று நிறைய வரைமுறைகளைக் கூறி…அவற்றை நாம் ஒழுங்காகக் கடைப்பிடித்தால், நோய்கள் வராமல் தடுக்கலாம், நம் வாழ்நாளை நீடிக்கலாம் என்றும் கூறி இருக்கிறார்கள் சித்தர்கள்.

சரும பராமரிப்பு

அவ்விதிமுறைகள், தோல் நோய்களில் இருந்தும், நமக்குக் கட்டாயம் பாதுகாப்பு அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சித்தர்கள் கூறிய நோய் அணுகா விதிமுறைகள்:

‘எண்ணெய் பெறின், வெந்நீரில் குளிப்போம்’

பொதுவாகக் குளிர்ந்த நீரில் குளிப்பதே சிறந்தது என்றாலும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, இளம் சூடான நீரில் குளிப்பது நல்லது.

தினமும் பால் குடித்தல் நல்லது.

ஒரு நாளைக்கு 2 வேளை உணவு உண்ணுதல் போதுமானது..

எந்த நிலையிலும், பசி வராமல் உணவு உண்ணக் கூடாது.

முதல் நாளில் சமைத்த உணவு அமுதமாக இருந்தாலும், அதை மறுநாள் உண்ணக்கூடாது.

சாப்பிடும் போது, இடையிடையே தண்ணீர் குடிக்கக் கூடாது.

மூல நோயை (Piles) அதிகப்படுத்தக் கூடிய காய்கறிகளை உண்ணக்கூடாது (மூலநோய், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மிகவும் பாதித்து, உடலின் அனைத்து நோய்களின் வரவுக்கும் காரணமாகலாம்.)

கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு தவிர மற்ற கிழங்குகளைத் தவிர்த்தல் வேண்டும்.

முற்றிய வாழைக்காயைவிட பிஞ்சு வாழைக்காய் நல்லது.

உணவுடன் புளித்த தயிர் சேர்த்துக் கொள்ளல் நல்லது.

“நீரைச் சுருக்கி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி”

அதாவது, நீரைக் கொதிக்க வைத்துச் சுருக்கியும், மோரை நீர் விட்டுப் பெருக்கியும், நெய்யை உருக்கியும் உபயோகிக்க வேண்டும்.

வெயிலில் அலையக்கூடாது.

பகலில் தூங்கக் கூடாது.

சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் போன்ற உடல் உபாதைகளை அடக்குதல் கூடாது.

மாதம் ஒரு முறை தாம்பத்திய உறவு கொள்ளுதல் நல்லது.

பகலில் உடலுறவு கொள்ளக் கூடாது.

பசிக்கும்போதும், உணவு உண்ட உடனேயும் உறவு கொள்ளக்கூடாது.

முறை தவறி தகாத உறவுகளில் ஈடுபடக் கூடாது.

ஆடு, கழுதை போன்ற விலங்குகள் வருகிற பாதையில், எழும் புழுதி நம் உடல் மேல் படுமாறு நெருங்கி நடக்கக் கூடாது.

தரை சுத்தம் செய்யும் இடத்தில், கிளம்பும் தூசி மேலே படும் படி நடக்கக் கூடாது.

இரவில் மர நிழலில் நிற்கக் கூடாது.

மாலை நேரத்தில் உறங்குதல், உணவு உண்ணல், காமச் செயல்கள் புரிதல், தலை வாருதல் ஆகியவற்றைச் செய்யக்கூடாது.

அழுக்கு உடை அணிதல் கூடாது.

பிறர் கை உதறும்போது நகத்திலிருந்து வரும் தண்ணீரும், குளித்து தலைமுடியைத் தட்டும்போது தெறிக்கும் தண்ணீரும் நம் மேலே தெறித்து விழும் இடத்தில் நிற்கவோ, நடக்கவோ கூடாது.

உடலைச் சுத்தப்படுத்த

6 மாதங்களுக்கு ஒரு முறை வாந்தி

4 மாதங்களுக்கு ஒரு முறை பேதி

15 நாள்களுக்கு ஒரு முறை நசியம்

வாரம் ஒரு முறை சவரம்

வாரம் இரு முறை (4 நாள்களுக்கு ஒரு முறை) எண்ணெய்க் குளியல் என முறையாக இவற்றை மேற்கொள்ள வேண்டும்.

இரவில் உணவு அருந்திய பிறகு சிறு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

இரவில் நன்றாக உறங்க வேண்டும்.

தூங்கும்போது இடது கைப்பக்கமாக ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.

மணம் மிக்க பூக்களை நடு இரவில் முகர்தல் கூடாது.

இவ்வாறெல்லாம் செய்தால்,

நாம் இருக்கும் இடத்தில் எமனுக்கு என்ன வேலை?

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம் என்று, பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை நம் சித்தர் பெருமக்கள் அழகாகக் கூறியுள்ளனர்.

ஆனால் நாமோ, நம் வாழ்க்கை முறைகளைத் தொலைத்து விட்டு, நோய்களுடன் நடமாடிக் கொண்டிருக்கிறோம்; போராடிக் கொண்டிருக்கிறோம்.

கட்டுரையாளர்: சித்த மருத்துவர் ராஜம் மூர்த்தி

எனவே நோய்களிலிருந்து…

குறிப்பாகத் தோல் நோய்களிலிருந்து…

விடுபட்டு, நிம்மதியாக நல்வாழ்வு வாழ…

சித்தர்கள் கூறிய நோய் அணுகா விதிமுறைகளை ஒழுங்காக, முடிந்த அளவு தவறாமல், கடைபிடிப்போம்; எல்லா நோய்களிலிருந்தும் குறிப்பாகத் தோல் நோய்களிலிருந்தும் விடுதலை பெறுவோம்; நல்வாழ்வு வாழ்வோம். வருமுன் காப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.