சத்தீஸ்கரில் 28 வயது பெண்ணின் முன்னாள் கணவனும், ஆண் நண்பரும் போலீஸிடம் சிக்காமல் கொலைசெய்ய வேண்டும் என்பதற்காக, இருவரும் சேர்ந்து த்ரிஷ்யம் படம் பார்த்துவிட்டு, அந்தப் பெண்ணைக் கொன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து கபீர்தாம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விகாஸ் குமார் செய்தியாளர்களிடம் வெளிப்படுத்திய தகவலின்படி, ஜூலை 19-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இதில், உயிரிழந்த பெண்ணின் முன்னாள் கணவரின் பெயர் லுகேஷ் சாஹு (29).
இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தன் மனைவிமீதான சந்தேகத்தால் அவரைப் பிரிந்து சென்றார். இதனால், அந்தப் பெண்ணும் கல்யாணப்பூரிலுள்ள தனது தந்தை ராம்கிலவன் சாஹு வீட்டுக்குத் திரும்பினார். இருப்பினும், நீதிமன்ற உத்தரவின்படி லுகேஷ் சாஹு, பிரிந்த சென்ற மனைவி மற்றும் தனது மூன்று குழந்தைகளின் வாழ்வாதாரத்துக்காக மாதாந்திர பராமரிப்பு தொகையை செலுத்திவந்தார். இதேநேரத்தில், அந்தப் பெண்ணுக்கு ராஜாராம் சாஹு (26) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. ராஜாராமிடமும் அந்தப் பெண் பணம் வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பணம் விஷயம் தொடர்ந்து நீடிக்கவே ராஜாராமுக்கு ஒரு கட்டத்தில் விரக்தி ஏற்பட்டிருக்கிறது.
அதனால், ஏற்கெனவே ஒருவரையொருவர் அறிமுகம் கொண்ட லுகேஷ் சாஹுவும், ராஜாராமும் அந்தப் பெண்ணை தீர்த்துக்கட்ட முடிவுசெய்தனர். அதைத் தொடர்ந்து, எப்படி மாட்டிக்கொள்ளாமல் கொலைசெய்து, உடலை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதற்காக இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளிவந்த த்ரிஷ்யம் படத்தை இருவரும் பார்த்திருக்கின்றனர். பின்னர், ஜூலை 19-ம் தேதி ராஜாராம் அந்தப் பெண்ணை அழைத்து அவரின் இருசக்கர வாகனத்திலேயே கனிகுடா வனப்பகுதிக்குச் சென்றார். கூடவே, போட்டுவைத்த திட்டத்தின்படி லுகேஷ் சாஹுவும் அந்த வனப்பகுதிக்கு வந்துசேர்ந்தார்.
இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கொலைசெய்து, ஒரு பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் உடலைப் புதைத்தனர். மேலும், தடயம் இருக்கக் கூடாது என்பதற்காக, உடலைப் புதைக்க பயன்படுத்திய விவசாய வேலை உபகரணங்களை அரசுப் பள்ளிக்கு அருகேயுள்ள ஓடையில் வீசிவிட்டு, பெண்ணின் இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை கர்ரனாலா அணையில் வீசினர். அதோடு, பெண்ணின் ஆபரணங்களைக் கிராமத்துக்கு அருகேயுள்ள மின்கம்பத்துக்கு அருகில் மண்ணில் புதைத்துவைத்தனர்.
இவ்வாறிருக்க, உயிரிழந்த பெண்ணின் தந்தை ராம்கிலவன் சாஹு, தனது மகளைக் காணவில்லை என ஜூலை 22-ம் தேதி லோஹாரா காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரை ஏற்று விசாரணையில் ஈடுபட்ட போலீஸார், தொழில்நுட்ப ஆதாரங்கள், செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில், லுகேஷ் சாஹு மற்றும் ராஜாராம் சாஹு ஆகிய இருவரையும் நேற்று கைதுசெய்தனர்.
அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், கொலைக்கு முன் த்ரிஷ்யம் படத்தை ராஜாராம் நான்கு முறையும், லுகேஷ் சாஹு ஒரு முறையும் பார்த்திருக்கின்றனர் என்பது அவர்களின் வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது. அதையடுத்து, புதைக்கப்பட்ட பெண்ணின் உடல், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள், பெண்ணின் ஆபரணங்களை மீட்ட போலீஸார், தற்போது தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.