பொது போக்குவரத்து வசதியை பயன்படுத்தி கனடா-மெக்சிகோ பயணம்; சாதனை படைத்த நபர்

வான்கோவர்,

கனடா நாட்டின் வான்கோவர் பகுதியை சேர்ந்தவர் வில்லியம் ஹுய் (வயது 40). மென்பொருள் பொறியாளர். சாகச பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவரான இவர், 2013-ம் ஆண்டு நாடு விட்டு நாடு பயணம் செய்யும் முயற்சியை மேற்கொண்டார்.

ஆனால், போக்குவரத்துக்கான சரியான திட்டமிடல் இல்லாத சூழலில் அவரால் அதில் வெற்றி பெற முடியவில்லை. 11 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த ஆண்டில் அவர் புதிய முயற்சியை தொடங்கினார். அதில் வெற்றி பெற்று சாதனையும் படைத்திருக்கிறார்.

இவருடைய பயணம் கடந்த ஜூன் 24-ல் தொடங்கியது. அரசு பேருந்துகள், ரெயில்கள் என பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி பயணம் மேற்கொண்டு மெக்சிகோ நாட்டை அடைந்துள்ளார். இந்த தனித்துவ சாதனையை 9 நாட்களில் மேற்கொண்டு முடித்திருக்கிறார். இதற்கு அவருடைய பயண திட்டமிடல் கைகொடுத்து உள்ளது.

பேருந்து நிறுத்தங்களுக்கு இடையே, அதிக பட்சம் 15 நிமிடங்கள் எடுத்து நடந்து சென்றிருக்கிறார். அதற்கு மேல் அவர் நேரம் எடுத்து கொள்ளவில்லை. வைபை வசதி கொண்ட பஸ்களில் பயணித்து, அதனை பயன்படுத்தி பயணகால அளவை திட்டமிட்டு செயல்படுத்தி இருக்கிறார்.

பணமில்லா பரிவர்த்தனைகள், கிரெடிட், டெபிட் கார்டுகள் வழியே செலவினங்களை மேற்கொள்ளும் வசதி ஆகியவை அவருக்கு கூடுதல் பலனளித்துள்ளன.

சர்வதேச எல்லைகள் என வரும்போது, நடந்து சென்று கடந்திருக்கிறார். அமெரிக்கா-கனடா எல்லையை கடக்கும்போது, தன்னுடைய பயண நோக்கங்களை பற்றி விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என ஹுய் கூறுகிறார்.

பஸ் கட்டணங்களுக்கு 200 டாலர்களையே (ரூ.16,700) செலவிட்டு இருக்கிறார். ஆனால், வாழ்நாள் சாதனையை அவர் படைத்திருக்கிறார். ஓரிகாவன் கடலோரம், வடக்கு கலிபோர்னியா மற்றும் பரபரப்பு நிறைந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கூட குறைந்த கால அளவில் பயணித்திருக்கிறார்.

இதேபோன்ற பயணம் மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு அவர் கூறுகிற அறிவுரை என்னவெனில், முழு அளவில் ஆய்வு செய்யுங்கள், குறைவான சுமையை எடுத்து செல்லுங்கள், கழிவறையை உபயோகப்படுத்தும் தேவைக்கான இடைவேளையை திட்டமிட்டு அமைத்து கொள்ளுங்கள் மற்றும் அடுத்த பஸ் எப்போது வரும் என எப்போதும் தெரிந்து வைத்திருங்கள் என கூறுகிறார்.

முதல் முயற்சியில் போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை முறையாக திட்டமிடாமல் தோல்வி ஏற்பட்டபோதும் மனம் தளராமல் அடுத்த முயற்சியை திட்டமிட்டு மேற்கொண்டு, ஹுய் அதில் சாதனை படைத்திருக்கிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.