மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள். ரஜினியின் `வேட்டையன்’ இந்த தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது. இதனை அடுத்து அவர் நடித்து வரும் படம் `கூலி’ படத்தின் ஷூட்டிங், மும்முரமாக நடந்து வருகிறது.
ரஜினியின் 170வது படம், ‘வேட்டையன்’. இந்தப் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, சர்வானந்த், மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா, அபிராமி, கிஷோர், ரவிமரியா என நடிகர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகிறது. எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு, அனிருத் இசை, பிலோமின் ராஜின் படதொகுப்பு என அசத்தலான டீமும் அமைந்துள்ளது.
ரிலீஸுக்குக் குறுகிய வாரங்களே இருப்பதால், படத்தின் டப்பிங் வேலைகள் வேகவேகமாக நடந்து வருகின்றன. அபிராமி, துஷாராவைத் தொடர்ந்து ரித்திகா சிங் உட்படப் பலரும் டப்பிங் பேசிவிட்டனர். ‘கூலி’ படப்பிடிப்பின் பிரேக் அன்று, ரஜினி டப்பிங் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ரஜினியின் 171வது படமான ‘கூலி’யின் படப்பிடிப்பு சத்தமே இல்லாமல் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கிறது. ‘லியோ’விற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் இப்படத்தில் ரஜினியுடன், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், ‘மாஸ்டர்’ மகேந்திரன் நடித்து வருகின்றனர். ரஜினியின் அட்டகாசமான தோற்றத்தையும் லோகேஷ் வெளியிட்டு, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
ஹைதராபாத் ஷெட்யூலில் ரஜினியுடன், ஸ்ருதிஹாசன் நடித்த காட்சிகள் தவிர, நூற்றுக்கணக்கான ஸ்டன்ட் கலைஞர்கள் பங்குபெறும் ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். விஜய்யின் ‘சர்கார்’, கமலின் ‘விக்ரம்’ ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘விக்ரம்’ படத்தில் அன்பறிவ்-வின் ஸ்டன்ட்கள் பேசப்பட்டது போல, ‘கூலி’யிலும் பேசப்படும் என்கிறார்கள்.
முதற்கட்ட படப்பிடிப்பை அடுத்து, சென்னையில் ஈ.ஆர்.ஆரில் உள்ள ஸ்டூடியோவிலும் ஆக்ஷன் காட்சிகள் பரபரக்கின்றன. இதற்கென ஸ்பெஷலாக அரங்கம் அமைத்துள்ளனர். அங்கேதான் ‘கூலி’யைச் செதுக்கி வருகிறார்கள். இங்கும் அதன் தொடர்ச்சியாக உள்ள ஆக்ஷன் காட்சிகளை எடுத்துள்ளனர். வெளிநாட்டு ஸ்டன்ட் மாஸ்டர் ஒருவரும் ஆக்ஷன் காட்சிகளில் பங்களித்து வருகிறார். அந்தக் காட்சிகள் சிலிர்க்க வைக்கும் என்கிறார்கள்.
லோகேஷ் கமலின் ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்தது என்றாலும் ரஜினி ரசிகர்களின் பல்ஸையும் அறிந்திருக்கிறார் என்கிறார்கள் யூனிட்டினர். படப்பிடிப்பு அரங்கில் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கின்றன என்றும், மொபைல் போன்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன என்றும் சொல்கிறார்கள். தவிர ராயப்பேட்டையில் ‘விக்ரம்’ படப்பிடிப்பு நடந்த இடத்தில், ‘கூலி’யின் இரண்டாம் யூனிட் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. சத்யராஜ், ஸ்ருதிஹாசன் காம்பினேஷனில் அங்கே காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.