Doctor Vikatan: என் தோழிக்கு முதல் பிரசவத்துக்குப் பிறகு நீரிழிவு வந்துவிட்டது. இப்போது அவள் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறாள். குழந்தை பிறந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா என்பதில் அவளுக்கு பயமிருக்கிறது. நீரிழிவு உள்ள அம்மாக்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
நீரிழிவு உள்ள அம்மாக்கள் குழந்தைக்கு தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம். அதுதான் குழந்தைக்குப் பாதுகாப்பானது, ஆரோக்கியமானது.
நீரிழிவு பாதிப்பு என்பது தாய்ப்பால் கொடுப்பதற்கு ஒருபோதும் தடையாக அமைவதில்லை. தாய்க்கு நீரிழிவு இருக்கும் பட்சத்தில் குழந்தைக்கும் அந்த பாதிப்பு இருக்க வேண்டும் என அவசியம் இல்லை.
நீரிழிவு உள்ள அம்மாக்களின் ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் ரத்தச் சர்க்கரை அளவும் அதிகரிக்கத் தொடங்கும். அதாவது குழந்தையின் குளுக்கோஸ் அளவும் அதிகரிக்க ஆரம்பிக்கும். அதன் விளைவாக அந்தக் குழந்தைக்கு இன்சுலின் சுரப்பும் அதிகரிக்கத் தொடங்கும்.
குழந்தைக்கு இன்சுலின் சுரப்பு அதிகரிக்க ஆரம்பிக்கும்போது குழந்தை பிறந்து வெளியே வந்ததும் அதற்கு சட் சட்டென்று ரத்தச் சர்க்கரை அளவானது குறையத் தொடங்கும். எனவே, குழந்தை பிறந்ததும் தாய்க்கு நீரிழிவு இருந்தாலும் அடிக்கடி அதற்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டியது அவசியம். இதன் மூலம் குழந்தைக்கு ஹைப்போ கிளைசீமியா (Hypoglycemia) எனப்படும் தாழ்சர்க்கரை நிலை ஏற்படுவது தவிர்க்கப்படும்.
எனவே, நீரிழிவு உள்ள அம்மாக்கள் தாய்ப்பால் கொடுப்பதால் அந்தத் தாய்ப்பாலின் வழியே குழந்தைக்கு நீரிழிவு வந்துவிடும் என பயப்படத் தேவையில்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.