கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு புதிய எரிபொருள்: இந்தியா – ரஷ்யா இடையே ரூ.10,000 கோடியில் ஒப்பந்தம்

புதுடெல்லி: கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு புதிய எரிபொருளை விநியோகம் செய்வது தொடர்பாக இந்தியா – ரஷ்யா இடையே ரூ.10,000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

தமிழகத்தின் கூடங்குளத்தில் ரஷ்யாவின் உதவியுடன் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள முதலாவது அணு உலையில் கடந்த 2013 அக்டோபரிலும், 2-வது அணு உலையில் கடந்த 2016 ஜூலையிலும் மின் உற்பத்தி தொடங்கியது.

இரு அணு உலைகளிலும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஓர் அணு உலையில் 163 எரிகோல்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் மூன்றில் ஒரு பங்கு எரிகோல்கள் ஆண்டுக்கு ஒருமுறை மாற்றப்படும். இதற்காக 2 மாதங்களுக்கு மேல் மின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது.

இந்த சூழலில் கூடங்குளத்தில் ரஷ்யாவின் உதவியுடன் 3, 4-வது அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் 2025-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய அரசின் அணுசக்தி கழகமான ரோசோடாமின் டிவிஇஎல் நிறுவனம் கூடங்குளத்தின் 3, 4-வது அணுஉலைகளுக்கு புதிய எரிபொருளை விநியோகம் செய்ய உள்ளது.

இதன் மூலம் அணு உலை எரிகோல்களின் ஆயுள்காலம் கணிசமாக அதிகரிக்கும். மின் உற்பத்தியில் அடிக்கடி தடங்கல் ஏற்படாது. எரிபொருளுக்கான செலவும் குறையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த ஜூலையில் பிரதமர் மோடி ரஷ்யாவுக்கு சென்றபோது, கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக ரஷ்யாவின் ரோசோடாம் அதிகாரிகள், இந்திய அணுசக்தி கழக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் அடிப்படையில் கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு புதிய எரிபொருளை விநியோகம் செய்வது தொடர்பாக இந்தியா – ரஷ்யா இடையே ரூ.10,000 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதன்படி, 2025 முதல் 2033 வரை கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு தேவையான புதிய எரிபொருளை ரஷ்யா வழங்கும். இந்த எரிபொருளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக இரு நாடுகள் தரப்பில் கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட உள்ளது.

இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மிதக்கும் அணு மின் நிலையங்கள்: ரஷ்யாவின் உதவியுடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மிதக்கும் அணு மின் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கடந்த ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப் பட்டது.

தற்போது ரஷ்யா மற்றும் சீனாவில் மட்டுமே மிதக்கும் அணு மின் நிலையம் திட்டம் அமலில் உள்ளது. அமெரிக்கா, தென்கொரியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இந்த திட்டத் துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பட்டியலில் இந்தியாவும் இணைய உள்ளது.

இதற்கான தொழில்நுட்ப உதவி களை வழங்க ரஷ்யா முன் வந்துள்ளது. முதல்கட்டமாக அந்தமான் கடல் பகுதிகளில் மிதக்கும் அணு மின் நிலையங்கள் நிறுவப்பட உள்ளது குறிப் பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.