சென்னைக்கு அருகில் அல்ல, சென்னையிலே இப்படி தான்… `திடீர்’ நகரின் நரக காட்சிகள்..!

சென்னை புரசைவாக்கம் பகுதியில் இருக்கும் திடீர் நகரின் அவல நிலை குறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அப்பகுதி தொடர்பான சில புகைப்படங்கள் நம்மை கலங்க செய்தன. இது குறித்து விசாரிக்க நாமே களத்துக்கு நேரில் சென்றோம்..!

சென்னை புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் அம்பேத்கர் சிலை ஒன்று ஒரு பகுதியை கைக்காட்டிக்கொண்டிருந்தது. அது தான் `திடீர்’ நகர்.

திடீர் நகர்
திடீர் நகர்
திடீர் நகர்

பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையின் ஓரத்தில் அமைந்திருந்த ‘திடீர்  நகர்’ குடியிருப்புக்குள் சென்றோம்‌‌. அந்நகரிலுள்ள மக்களுக்கு  முக்கிய  அடையாளமாக அங்குள்ள பொது கழிப்பறையே இருந்தது. மக்கள் நடந்து செல்வதற்கான சாலை  இரண்டரை அடியில் இருபக்கங்களிலும் அடுத்தடுத்த வீடுகளாக  திடீர் நகர் குடியிருப்பு பகுதி அமைந்திருந்தது. இங்கு 700-க்கும் மேற்பட்ட குடும்பங்களும், மூவாயிரத்திற்கும் அதிகமான மக்களும் வசிப்பதாக கூறினர். சுத்தமான குடிநீர் வசதி, சுகாதார சூழல் ,வாழ்வதற்கான இடம் என்று எந்தவொரு அடிப்படை வசதிகளும் இன்றி இருப்பதை முதல் பார்வையிலே நம்மால் அறிய முடிந்தது.

திடீர் நகர்

இது குறித்து நம்மிடம் பேசிய அப்பகுதியை சேர்ந்தவர்கள், “இந்த திடீர் நகர் பகுதியில இருக்கிற மக்கள், 1977-வது வருசத்துல சாலை மாநகர் பகுதில போதிய இட வசதி இல்லாததனால, அரசு 98 குடும்பங்களை இந்த பகுதிக்கு  குடியமர்த்தியது. எங்க மக்கள்  குடிசைகள் கட்டி தான் வாழ்ந்திட்டு வந்தாங்க. குடிசைகளில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமா  அரசு எங்களுக்கு  2001-2006 காலகட்டத்துல சிமெண்ட் கூரையால வேயப்பட்ட வீடுகளை கட்டிக் கொடுத்தாங்க. எந்த வீட்டுக்கும் தனியாக குடிநீர் வசதியோ, கழிப்பிட வசதியோ ஏற்படுத்தி தரல. பொதுக் கழிப்பறையைத் தான்  இங்க வாழ்ற எல்லா மக்களும் பயன்படுத்திட்டு இருக்கோம். அதை போய் பாருங்க, எங்களுக்கு எந்த வித அடிப்படை வசதியுமே இல்லை. வாராவாரம் பிள்ளைகளுக்கு போய் ட்ரிப்ஸ் போட்டுட்டு வரோம். மனுசங்க வாழுறதுக்கான இடமாவா இருக்கு. ஆனா இங்கதான் வாழ்ந்துட்டு இருக்கோம்” என்று விரக்தியில் தேம்பலுடன் பேசி முடித்தார்.

அவர் சொன்னபடியே கழிவறை பகுதிக்குச் சென்றோம், பெண்களுக்கு 4 கழிப்பறை, தண்ணீர் தொட்டியிலும், வாளியிலும் பாசி படர்ந்து பராமரிப்பு இன்றி சுத்தமில்லாமல், சீர் கெட்டு காணப்பட்டது.   10 அடிக்கு 10 அடி இருக்கும்  வீடுகளில் 3 தலைமுறை மக்கள் வசித்து வருகின்றனர். குளிக்க சமைக்க என  எல்லாவற்றுக்கும்  ஒரே இடம். கழிவு நீர் போக சாக்கடை வசதியும் இல்லை, பக்கெட்டில் மோந்து ஊத்த வேண்டிய நிலை தான். இங்க இருக்கின்ற பெண் பிள்ளைகளுக்கு இரவு நேரங்களில் பீரியட்ஸ் வந்தால்கூட,  பக்கத்துல இருக்குற சுடுகாட்டு பகுதிக்கு தான் ஓட வேண்டிருக்கிறது. குடிநீர் குழாய் இல்லை, மெயின் ரோடு பொது கழிப்பறை அருகில்  உள்ள பம்ப்பை குடிக்க குளிக்க என எல்லாத்துக்கும் பயன்படுத்த வேண்டிய நிலை. பொது கழிப்பறைகள் மிக மோசமாக இருப்பதால், அவர்கள் குடியிருப்பு பின் பகுதியில் இருக்கும் ஓட்டேரி சுடுகாட்டில் திறந்த வெளி கழிப்பறையை பல காலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

திடீர் நகர்
திடீர் நகர்
திடீர் நகர்
திடீர் நகர்
திடீர் நகர்

பெண்கள், குழந்தைகள் என பாதுகாப்பில்லாமல் புதர்களுக்கு உள்ளே மிகவும் கொடுமையான நிலையில் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். பல வீடுகளில் சரியான காற்றோட்ட வசதியும் சன்னல்களும் இல்லாமல், ஆஸ்பெட்டாஸ் மேற்கூரை  பயன்பாட்டின் காரணமாக அதீத வெப்பத்தினால்  தோல் பிரச்னை உட்பட பல பிரச்னைகள்  வந்து சிலர் வெயில் காரணமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. மழைக் காலங்களில்  கழிவு நீருடன் பாம்பு, புழு, பூரான் போன்றவை  வீடு புகுந்து விடுகிறது. இப்படி, வெயில், மழை, குளிர் என எந்த காலம் வந்தாலும், தலைநகர்  மத்தியில் இருக்கும் திடீர் நகரின் நிலை என்னவோ பரிதாப நிலை தான்….

“அரசு எங்களுக்கு நாங்க  வசிக்கிற  இடத்துக்கு பக்கத்திலே அடிப்படை வசதியுடன் அடுக்குமாடி குடியிருப்பை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB) கட்டிக்கொடுக்கனும் . அதுக்கு முன்னாடி  தற்போது இருக்கும் கழிப்பறையை புதுப்பித்து மக்கள் தொகைக்கு ஏற்ப நவீன கழிப்பிடங்களை சென்னை பெருநகர மாநகராட்சி (GCC) கட்டித்தரணும். சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு எல்லா வீடுகளுக்கும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் மூலமா பண்ணித் தரணும். மழைநீர் கால்வாயில் உள்ள மணல் அடைப்புகளை அகற்றி, மாநகர அதிகாரிகள் ( GCC) ஆய்வு  செய்யணும். மழைக் காலங்களில் கழிவுநீர் வீட்டுக்குள்ள வந்திட்டுது. இதுதான் எங்களோட கோரிக்கை. அரசு எங்களோட கோரிக்கைகளை ஏற்று எங்களுக்கான அடிப்படை வசதிகளை செஞ்சி தரணும்.” அங்கு இருக்கும்  என மக்கள் அனைவரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு மக்களை திரட்டி போராட்டங்கள் நடத்தி வருகிறது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அங்கு ஆர்ப்பாட்டங்களை முன்நின்று நடத்திய CPIM) கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி. செல்வா அவர்களிடம் பேசினோம்.

“20 ஆண்டுகளுக்கு  முன்னர், திடீர் நகருக்கு பின்புறம் உள்ள இடத்தை  அங்குள்ள சில தனியார் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு  கட்டுவதற்காக ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்தார்கள். அப்போது திடீர் நகர் மக்கள், மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிணைந்து போரட்டம் நடந்தி ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை அகற்ற வைத்தோம்.

அதற்கு பிறகும் கூட  மக்களோட அடிப்படை வசதிக்காக, அதிகாரிகள் கிட்ட மக்கள் பலமுறை மனு கொடுப்பதும், உடனே சரி செய்றோம் என்று சொல்வதும்  மட்டுமே இருக்கிறதே  தவிர, செயல்களில் ஒன்றும் இல்லை. கண் துடைப்புக்கு அதிகாரிகள் வந்து பார்ப்பதும் செல்வதுமாக இருக்கும்.  

2022ம் ஆண்டு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு  வாரியத்தில் இருந்து வந்த சில அதிகாரிகள், “இந்த இடம் தனியாருக்கு சொந்தமானது , இந்த நிலத்தை அரசுக்கு கொடுத்தவர் இறந்துவிட்டார். அவரு பையனுக்கு இந்த இடம் சொந்தம்,  இந்த வழக்கு நிலுவையில்  இருக்கிறது” என்று  இந்த மக்களை துரத்துவதற்காக பொய் சொன்னார்கள்.  ஆனால் 1949 ஆண்டு நில எடுப்பு சட்டத்தின் கீழ், இது அரசு நிலமாகவே இருந்தது.

2023ம் ஆண்டு தொடர் கோரிக்கைகளால் சென்னை மாநகராட்சி கிட்ட இருந்து இந்த இடம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கிட்ட கொடுக்கப்பட்டது. அப்படி இருந்தும் பல ஆண்டு கோரிக்கையான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதற்கு எந்த முயற்சியும் எடுக்கபடவில்லை.
கேட்டால்  நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், “ எங்க கிட்ட போதுமான நிதி இல்ல. அரசு நிதி ஒதுக்கினால்,  நாங்க  வேலைய தொடங்குவோம்“ என்று பதில்சொல்கிறார்கள்.

இதற்கு இடையில், சென்னை மெட்ரோ வாட்டர் வாரியத்திடம் இணைப்புக்காக ஒவ்வொரு வீட்டில் இருந்தும் 100 ரூபாய் கட்டியும், இணைப்பு தரவில்லை. கேட்டால், “ஆக்கிரமிப்பு” னு பதில் சொல்கிறார்கள். அரசு மக்களுக்கு ஒதுக்கிய நிலத்தை ஆக்கிரமிப்பு என்று  சொல்ல இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு ?
 

இப்போது  கடைசியா ஜூலை 8-ம் தேதி, GCC துணை ஆணையர் லலிதா அவர்களை  இந்த பகுதி மக்களோடு  சேர்ந்து பார்த்து வந்தோம். எங்கள் குறைகள் எல்லாம் கேட்டு, கண்டிப்பா நடவடிக்கை எடுப்போம் னு உறுதி  அளித்து இருக்காங்க . அடுத்து ஆணையர் ராதாகிருஷ்ணன்(அப்போதைய) அவர்களை நேரில் சந்தித்து புகார் அளித்தோம். இப்படி  மாவட்ட ஆட்சியர், முதல்வர் தனி பிரிவு, மேலாண்மை இயக்குனர்,  உதவி பொறியாளர் னு நாங்கள் மனு கொடுக்காத ஆட்களே இல்ல. ஆனா ஒன்னும் இதுவரைக்கும் நடந்த பாடு இல்ல .

திடீர் நகர்

எழும்பூர் ஒரு ரிசர்வ் தொகுதி. தலித் மக்கள் பலர் வாழும் இந்த இடத்தில் எந்த தனி கவனமும் இல்லாம இங்கே அரசு இந்த மக்களுக்கு, மெத்தனம் காட்டுகிறது எனில், இது யாருக்கான சென்னை?  யாரை சுரண்டி யாரை அழித்து யாருக்காக நகரம் அமைக்கிறது இந்த அரசு?  இது வாழ்வாதாரத்துக்காக உழைக்கும் மக்களின் போராட்டம்.  இன்னும் எங்களுக்கு எந்த நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை என்றால், சிபிஐ(எம்) சார்பாக மக்களை  திரட்டி ரிப்பன் மாளிகையை நோக்கி எங்கள் போராட்டம் தொடரும். உங்கள் மூலமாகவாது அரசு இந்த திடீர் நகரை திரும்பி பார்க்கட்டும்” என்றார்.

தலைநகரின் மத்திய பகுதியில் அடிப்படை வாழ்வாதாரத்திற்காக போராடும் மக்களை திரும்பி பார்க்குமா அரசு?

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.