பெங்களூரு: கர்நாடகாவில் துங்கபத்ரா அணையின் மதகு உடைந்ததை தொடர்ந்து,பிற அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் கொப்பலில் உள்ள துங்கபத்ரா அணையின் 19-வது மதகின் ஷட்டர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உடைந்தது. இதனால் அணையில் இருந்து அதிக நீர் வெளியேறியதால் கர்நாடகாவின் கொப்பல், பீஜாப்பூர், ரெய்ச்சூர், பெல்லாரி ஆகிய4 மாவட்டங்களிலும், ஆந்திராவில்கர்னூல் உள்ளிட்ட 3 மாவட்டங்களிலும் கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.
இதுகுறித்து கர்நாடக துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
துங்கபத்ரா அணைக்கு நேரடியாக சென்று நான் ஆய்வு செய்தேன். அந்த அணை கட்டப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிறது. துங்கபத்ரா அணையின் 70 ஆண்டுவரலாற்றில் முதல் முறையாக இத்தகைய சம்பவம் நடந்துள்ளது.உடைந்த மதகின் ஷட்டரை சீரமைக்க சென்னை, ஹைதராபாத்தில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் மொத்தம் 23 அணைகள் உள்ளன. அவற்றில் சில அணைகள் ஆபத்தான நிலையில் இருப்பதை மறைக்க விரும்பவில்லை. எனவே அணைகளின் தற்போதைய நிலை, பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுவினர் 23 அணைகளையும் நேரில் பார்வையிட்டு, அறிக்கை தாக்கல் செய்வார்கள்.
அதன்பிறகு பலவீனமாக இருக்கும் அணைகளை புனரமைக்கும் பணிகள் தொடங்கப்படும். மதகு,ஷெட்டர், கரைகள் பலம் வாய்ந்ததாக மாற்றப்படும். எனவே அணைகளின் அருகிலும், ஆற்றின் கரையிலும் வாழும் மக்கள் அச்சம்அடைய தேவையில்லை. இவ்வாறு டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.