ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில், கணவன் தன் மனைவியை இருசக்கர வாகனத்தில் கயிற்றால் கை, கால்களைக் கட்டி கரடுமுரடான பாதையில் தரதரவென இழுத்துவந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, ஒரு மாதத்துக்கு முன்பாக நஹர்சிங்புரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டாலும், தற்போது இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதையடுத்து வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, இத்தகைய கொடூரத்தைச் செய்தவர் பிரேம் ராம் மேக்வால் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறார். இவர் வேலைவெட்டியில்லாத மற்றும் போதைப்பொருள்களுக்கு அடிமையான நபர். இவ்வாறிருக்க இவரின் மனைவி, ஜெய்சால்மரிலுள்ள தன்னுடைய சகோதரியைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியதால் கணவனால் இப்படிப்பட்ட கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்.
அதன் பிறகு, அவர் இந்த விஷயம் பற்றி போலீஸிடமும் புகாரளிக்கவில்லை. இருப்பினும், அந்த சம்பவத்தின்போது பெண்ணை காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து போலீஸாருக்குத் தெரியவந்திருக்கிறது. அதன்பிறகு, தற்போது தனது உறவினர் வீட்டிலிருக்கும் அந்தப் பெண்ணை தொடர்புகொண்ட போலீஸார், பிரேம் ராம் மேக்வாலைக் கைதுசெய்தனர்.
இன்னொருபக்கம், பிரேம் ராம் மேக்வால் சுமார் 10 மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை இரண்டு லட்ச ரூபாய்க்கு மணமகளாக வாங்கியதாகவும் கூறப்படுகிறது. ஜுன்ஜுனு, நாகௌர் மற்றும் பாலி போன்ற மாவட்டங்களில் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாறு வாங்கப்படும் பெண்கள், உடல் மற்றும் மனரீதியாக கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாகின்றனர். இதனால், கணவர் தாக்கிய சம்பவம், மனித கடத்தல் என இரண்டு கோணங்களில் விசாரித்து வருவதாக உள்ளூர் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.