வேலூர் மாவட்டத்தில், கொட்டித்தீர்க்கும் தொடர் கனமழையின் காரணமாக தாழ்வான இடங்களில் குட்டைப்போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. காட்பாடி பகுதியில் நேற்று 7 செ.மீ மழை பதிவாகி, சிலப் பகுதிகளை புரட்டிப் போட்டிருக்கிறது. சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வி.ஐ.டி பல்கலைக்கழகம் செல்லக்கூடிய பிரதான சாலையில் 2 நாள்களாக கால் முட்டியளவுக்குத் தண்ணீர் தேங்கியிருக்கிறது. மழைநீர் வடியாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகிறார்கள். மாணவ, மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். காட்பாடி வி.ஜி.ராவ் நகர், முத்தமிழ் நகர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளையும் முழுவதுமாக மழைநீர் சூழ்ந்திருக்கிறது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டதால் குடியிருப்பு வாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளார்கள்.
பொருள்கள் மிதக்கின்றன. நனைந்த உடைகளை அவர்களால் மாற்றிக்கொள்ள முடியவில்லை; சமைக்க முடியவில்லை; குளிக்க முடியவில்லை. போதாக் குறைக்கு மழைநீரோடு கழிவுநீரும் கலந்துவிட்டதால் `நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ?’ என குழந்தைகளை அரவணைத்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அப்பகுதி வாசிகள்.
`வேலூர் மாநகராட்சி நிர்வாகம், மழை நீரை வடியச் செய்ய விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்வாய் பகுதி அடைப்புகளை சரி செய்வதோடு, கால்வாய் ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையையும் முன் வைத்திருக்கின்றனர்.
அதே சமயம், வேலூர் மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஏறக்குறைய 118 ஹெக்டேர் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமாகியிருக்கின்றன. நேற்றைய நிலவரப்படி, வேலூர் ஒன்றியத்தில் 5.08 ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்களும், கணியம்பாடி ஒன்றியத்தில் 33.19 ஹெக்டேர் நெற்பயிர்களும், அணைக்கட்டு ஒன்றியத்தில் 7.68 ஹெக்டேர் நெற்பயிர்களும் மூழ்கியிருக்கின்றன.
குடியாத்தம் ஒன்றியத்தில் 5.9 ஹெக்டேர் நெற்பயிர்களும், கே.வி.குப்பம் ஒன்றியத்தில் 13.81 ஹெக்டேர் நெற்பயிர்களும், பேரணாம்பட்டு ஒன்றியத்தில் 1.25 ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்களும், அதிகப்பட்சமாக காட்பாடி ஒன்றியத்தில் 50.93 ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்களும் மூழ்கி நாசமாகியிருக்கின்றன. புள்ளி விவரப்படி 151 விவசாயிகள் பாதிப்புக்குள்ளானதாக கணக்குக் காட்டப்பட்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கக் கூடும் என்கின்றனர் அதிகாரிகள். பயிர்களை இழந்து வாடும் விவசாயிகளுக்கு உரிய நிவாரண இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் எனவும் பலத்தரப்பில் இருந்து கோரிக்கை வலுத்திருக்கிறது.