‘அமர்க்களம்’ படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அட்டகாசமான வெற்றியைக் கொடுத்து, அமர்க்களமான வசூலையும் வாரிக் குவித்த படம். சாஃப்ட்டான `காதல் மன்னன்’ அஜித்தை, அதிரடி ஆக்ஷன் மன்னனாக உருமாற்றிய படம்.
அஜித் – ஷாலினி காதல் திருமண வாழ்க்கைக்குத் திருப்புமுனையாக அமைந்த படம். ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடலால் 90-ஸ் கிட்ஸ்களை மூச்சுவிடாமல் பாடவைத்த படம். அஜித்தின் 25 வது படம். இப்படி, எக்கச்சக்க புகழ்ச்சி பின்னணி ’அமர்க்களம்’ படத்தை இயக்கிய இயக்குநர் சரணிடம் படத்தின் நினைவுகள் குறித்து பேசினேன்…
“அமர்க்களம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன மாதிரியே தெரியல. படத்தை நேற்று முடிச்சு பார்க்குற மாதிரி ஃப்ரெஷ்ஷா இருக்கு. ‘காதல் மன்னன்’ படம் தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்த வசூலைக் கொடுக்கல. ஆனா, படத்தை வாங்கினவங்களுக்கு எல்லாருக்குமே நல்ல லாபம். அதனால, இன்னொரு படம் அதே பேனர்ல பண்றதுக்கு முடிவாச்சு. அஜித் சாரோட நல்ல மனசு அவரும் பண்ணித்தர ஒப்புக்கிட்டார்.
’காதல் மன்னன்’ படத்துக்கு சப்போர்ட்டிவ்வா பட்டாம்பூச்சியை இரும்பு சங்கிலி பிணைச்சுக்கிட்டிருக்கிற மாதிரி அவசர அவசரமா ’அமர்க்களம்’ படத்தோட விளம்பரத்தை ரெடி பண்ணி வெளியிட்டோம். அப்போ, என் மைண்டுல கதையே கிடையாது. அமர்க்களம்ங்குற டைட்டிலும் அந்த விளம்பர பேனரும்தான் இருந்துச்சு. அப்போதான், அஜித் சார் எனக்கு ’அமர்க்களம்’ ஆக்ஷன் படமா வேணும்னு கேட்டார். அதுதான், எனக்கு சவாலா இருந்துச்சு.
அதுக்கப்புறம்தான், ஆக்ஷன் கதையே ரெடி பண்ணினேன். ஆனா, பட்டாம்பூச்சியை இரும்பு சங்கிலியால பிணைச்சுக்கிட்டிருக்கிற கதையை கடைசிவரைக்கும் நாங்க ரெடி பண்ணவே இல்ல. இந்த ஆக்ஷன் கதையிலேயே ட்விஸ்ட் வெச்சு இப்போவும் மக்கள் ரசிக்கிற மாதிரிதான் அப்பவும் பண்ணியிருக்கேன். மற்ற ஹீரோக்களா இருந்திருந்தா நெகட்டிவ் ஷேட் இருக்கிற காட்சிகளில் தயங்குவாங்க. அஜித் சார் நெகட்டிவ் ஷேட் பற்றி கவலைப்படல. நெகட்டிவ் ஷேட் வரட்டும்னு அவரே கேட்டு வாங்கி நடிச்சார். படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்பே ஹிட் ஆகிடும்னு அவருக்கு பெரிய நம்பிக்கை வந்துடுச்சு. அதனால, அப்பவே சான்ட்ரோ கார் ஒண்ணு வாங்கி பரிசா கொடுத்தார். அவரே, அந்த காரை ஓட்டிக் கொண்டுவந்து கொடுத்தார். அதைப்பார்த்ததும் எனக்கு அப்படியொரு சர்ப்ரைஸ்… அப்படியொரு சந்தோஷம். ஷூட்டிங் ப்ரேக்ல அஜித் சார் ரொம்ப காமெடி பண்ணுவார். நாங்க எல்லாம் வயிறு குலுங்க சிரிச்சுக்கிட்டே இருப்போம். ஷாட் ரெடி ஆனதும் அப்படியே எமோஷனல் சீனை முகத்துல கொண்டுவந்துடுவார். அவரை எப்படி வேணும்னாலும் ட்யூன் பண்ணலாம். இயக்குநர்களின் நடிகர் அவர்.
உண்மையிலேயே ரொம்ப தன்னம்பிக்கை கொண்டவர். அவரை முழுசா நம்புவார். அதேமாதிரி, ஒருத்தவங்களை நம்பிட்டார்ன்னா 200 சதவிகிதம் முழுசா நம்பி இறங்குவார். அதுதான் அவரோட ஸ்பெஷாலிட்டி. ஷாலினி மேடத்தைப் பற்றி சொல்லவே தேவையில்ல. அவங்க திறமையான நடிகை.
’அமர்க்களம்’ நடிக்க ஆறு மாசம் தவம் இருந்து அவங்களோட கால்ஷீட் வாங்குனோம். ’காதலுக்கு மரியாதை’ படத்துக்கப்புறம் படிக்கப்போறதா இருந்தாங்க. நாங்கதான், பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி ஒரு ஹீரோயின் வேணும்னு யோசிச்சதால அவங்கதான் அந்தக் கதைக்கு பொருத்தமா இருப்பாங்கன்னு கஷ்டப்பட்டு கால்ஷீட் வாங்கினோம். ஆனா, மூணாவது நாள் ஷூட்டிங்லேயே அஜித் சார் கத்தியை எடுத்து வீசும்போது தெரியாம அவங்க கையில பட்டு ரத்தம் வந்துடுச்சு.
ஷாலினி மேடம் என்ன பண்ணுவாங்களோ, அவங்க அப்பாவுக்கு என்ன பதில் சொல்றதுன்னு பதறிக்கிட்டு கிடந்தோம். ஆனா, ஷாலினி அதை ரொம்ப கேஷுவலா எடுத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறமும் எந்த பயமும் இல்லாம நடிச்சாங்க. ஷாலினி மேடத்தோட அப்பா வந்து பார்த்துட்டு, ஷூட்டிங்குல என் பொண்ணுக்கு இந்தமாதிரி எந்தெந்த சின்ன சின்ன விபத்துகள் ஏற்பட்டிருக்கோ அந்த படம் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகிடும்னு அவர் சொல்ல, அப்போதான் நாங்க நிம்மதி ஆனோம்.
அஜித் சார் ஷாலினிமேல கத்தி பட்டு ரத்தம் வந்ததும் அஜித் சார் பதறியடிச்சுக்கிட்டு ஓடிப்போய் அவரோட கார்ல இருந்த ஃபர்ஸ்ட் எய்டு கிட்-ஐ எடுத்துட்டு வந்து ஃபர்ஸ்ட் எய்டு பண்ணினார். படத்துல நடிச்ச எல்லோருமே ரொம்ப சின்சியரா நடிச்சாங்க. படம் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய சக்சஸைக் கொடுத்தது.
எல்லா ஊர்லேயுமே ’சத்தம் இல்லாத தனிமை’ பாடலை ஒன்ஸ்மோர் வேணும்னு திரும்ப திரும்ப தியேட்டர்ல கேட்டு அமர்க்களப்படுத்திட்டாங்க. ’அமர்க்களம்’ படத்தின் மூலமா 25,000 ரசிகர் மன்றங்கள் ஒரேநாளில் உருவாகிடுச்சு. அது, சாதாரண விஷயமே கிடையாது.
என்னோட இயக்கத்துல நடிக்கும்போது அஜித் சார் தன்னோட வீட்டுல இருக்கிற மாதிரி ஒரு ஃபீலோடு இருப்பார். அந்த நம்பிக்கையை நானும் காப்பாற்றினேன்” என்று நெகிழ்ந்தவரிடம், ”அமர்க்களம் படத்தின் மூலமாதான் அஜித் – ஷாலினி காதல் துளிர்த்து இப்போ தமிழ் ரசிகர்களின் ஆதர்த தம்பதியா இருக்காங்க. அதை, பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கு?” என்று கேட்டபோது,
“ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு. என்னை நடுவுல வெச்சுக்கிட்டுத்தான் அஜித் சார் அவரோட காதலை ஷாலினி மேடத்துக்கிட்ட சொன்னார். அதுவும் எப்படி சொன்னார்ன்னா, ‘இந்த படத்தோட ஷூட்டிங்கை சீக்கிரம் முடிங்க. ரொம்ப நாள் போச்சுன்னா நான் இவங்களை லவ் பண்ணிடுவேன் போல’அப்படின்னு ரொம்ப அழகா ப்ரப்போஸ் பண்ணினார். அப்போ, ஷாலினி மேடத்தோட கண்கள் வெட்கத்தால சிவந்துபோனதையும் அவங்களோட முகம் அப்படியே புன்னகை பூக்களால் நிரம்பி வழிஞ்சதையும் அமைதியாக அவங்களோட கண்கள் அலைபாய்ஞ்சதையும் பார்த்து மெளனசாட்சியாக நின்றேன்.
அஜித் சார் ஷாலினி மேடம்கிட்ட ரொம்ப கேரிங்கா இருப்பார். ’சத்தம் இல்லாத தனிமை’ கேட்டேன் பாடல் அவருக்கு ரொம்ப பிடிக்கும்னு நினைச்சு வெச்ச பாட்டு. ஆனா, அவருக்கு பிடிச்ச பாட்டு ஷாலினி மேடம் பாடின ‘சொந்தக்குரலில் பாட ரொம்ப நாளா ஆசை’பாட்டுதான். அந்த பாட்டை ஒரே கேசட்டுல ரெண்டு பக்கமும் ரெக்கார்டு பண்ணி, கார்ல போகும்போது திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே போவார். ’உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு’ பாடலும் அவரோட ஃபேவரைட்தான்.
அவர் ஷாலினி மேடத்தை ரொம்ப லவ் பண்ணினாலும் ஷூட்டிங்குல இதை எதையுமே வெளிப்படுத்தாம ரொம்ப கண்ணியமா நடந்துக்குவார். அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணினது என்னைத் தவிர வேறு யாருக்குமே தெரியாதுன்னா பார்த்துக்கோங்களேன். ஷூட்டிங் முடிஞ்ச பிறகுதான் எல்லோருக்குமே தெரியும். இத்தனை வருடங்கள் கழித்தும் ரெண்டு பேருமே அதே அன்போடு இருக்காங்கன்னா அஜித் சாரோட கேரிங்தான்.
படத்துலதான் அவர் ஹீரோ. வீட்டுக்கு போயிட்டார்ன்னா நடுத்தர குடும்பத்து மனிதர். ரொம்ப கேஷுவலா இருப்பார். நடுத்தர குடும்பத்து மனிதராதான் தன்னை மெயிண்டெய்ன் பண்ணுவார். வெளியில இருந்து பார்த்தா எல்லாவற்றிலும் விலகியிருக்கிற மாதிரி தெரியும். ஆனா, நாட்டு நடப்பு, அரசியல், போர்ன்னு உலக செய்திகள்வரை எல்லாவற்றிலும் அப்டேட்டா இருப்பார்” என்றவரிடம், ”அஜித்தை வெச்சு நாலு படங்கள் இயக்கிருக்கீங்க? விஜய்யை வெச்சு ஏன் படம் பண்ணலை?” என்று கேட்டபோது, “கவிதாலயா புரொடக்ஷன்ல விஜய் சாரை வெச்சு படம் பன்றதா முடிவாகியிருந்தது. ஆனா , சில பல காரணங்களால் எங்களால தொடர முடியல.
அந்த படம்தான் மாதவன் நடிச்ச ஜேஜே.” என்கிறவர், அமர்க்களம் ரீ ரிலீஸ் பற்றிய கேள்விக்கும் விடையளித்தார். “மூணு வருடத்துக்கு முன்னாடியே ரீ ரிலீஸ் பண்ணினோம். டிஜிட்டலில் ரொம்ப தரமான காப்பியா ரெடி பண்ணினோம். மீண்டும் ரீ ரிலீஸ் பன்றதை பற்றி தயாரிப்பாளர்தான் முடிவு பண்ணணும்” என்றார்.