புதுடெல்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கையில் எடுத்துச் செல்லக்கூடிய டாங்க் எதிர்ப்பு ஏவுகணை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்து பார்க் கப்பட்டது.
எதிரிகளின் டாங்க் மற்றும் கவச வாகனங்களை தகர்ப்பதற்கு, கையில் எடுத்துச் செல்லக் கூடிய ஏவுகணை லாஞ்சரை (எம்பி-ஏடிஜிஎம்) ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) உருவாக்கியது.
இதை எளிதாக கையில் தூக்கிச் சென்று தோள்பட்டையில் வைத்து எதிரிகளின் டாங்க் மற்றும் கவச வாகனம் மீது தாக்குதல் நடத்தலாம். பகல் மற்றும் இரவு நேரத்தில் இந்த ஏவுகணை லாஞ்சர்மூலம் தாக்குதல் நடத்த முடியும்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையில் லாஞ்சர், இலக்கை துல்லியமாக கணக்கிடும் கருவி, ஃபயர் கன்ட்ரோல் யூனிட் என்ற 3 முக்கிய பகுதிகள் உள்ளன. கடந்த ஏப்ரல் 13 மற்றும் 14-ம் தேதி அன்று ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் இந்த ஏவுகணை ஏற்கெனவே வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதியில் இந்த ஏவுகணை நேற்று மீண்டும் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டதாக டிஆர்டிஓ அதிகாரிகள் ெரிவித்தனர்.