மும்பை கடற்கரைகளில் இரவு நேரங்களில் வீடு இல்லாதவர்கள், யாசகம் கேட்பவர்கள் உறங்குவது வழக்கம். அது போன்று உறங்கியவர்கள்மீது கார் ஒன்று மோதிச் சென்றுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பை வர்சோவா கடற்கரையில் இந்த சம்பவம் நடந்தது. கடற்கரைக்குள் கார்கள் செல்வது கிடையாது. ஆனால் அதிகாலையில் கடற்கரைக்குள் அத்துமீறி நுழைந்த கார் ஒன்று, அங்கு உறங்கிக்கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் கணேஷ் விக்ரம் மற்றும் அவரது நண்பர் பப்லு ஆகியோர் மீது ஏறிச்சென்றது. இதில் கணேஷ் மீது முழுமையாக கார் ஏறிச்சென்றுவிட்டது. பப்லு மீது முழுமையாக ஏறவில்லை. காயம் அடைந்த அவர்கள் இரண்டு பேரையும் கணேஷ் சகோதரர் மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் கார் ஏறிச்சென்றதில் கணேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால், அவர் உயிரிழந்துவிட்டார். படுகாயம் அடைந்த பப்லு இது தொடர்பாக போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், “காலை 5:45 மணிக்கு கார் ஒன்று வேகமாக வந்த சத்தம் கேட்டு நான் எழுந்துவிட்டேன். அந்த கார் எனது அருகில் படுத்திருந்த கணேஷ் மீது ஏறிச்சென்றுவிட்டது.
இதில் கணேஷ் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. காரில் இருந்து இரண்டு பேர் இறங்கினர். அவர்கள் கணேஷ் காயம் அடைந்து கிடப்பதை பார்த்தவுடன், அங்கிருந்து ஓடிவிட்டனர்” என்று குறிப்பிட்டுள்ளார். பப்லுவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து கடற்கரையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விபத்தை ஏற்படுத்திய காரை அடையாளம் கண்டுபிடித்தனர். கடற்கரையில் பொதுமக்கள் படுத்திருப்பார்கள் என்று தெரிந்தே காரை கடற்கரைக்குள் கொண்டு வந்திருப்பதாக, போலீஸார் தெரிவித்தனர்.
தீவிர தேடுதலுக்கு பிறகு காரை ஓட்டிய நிகில் கைதுசெய்யப்பட்டார். நிகில் நாக்பூரைச் சேர்ந்தவர். காரை இரவல் வாங்கிக்கொண்டு ஒருவரை மும்பையில் விடுவதற்காக வந்திருந்தார். மும்பையில் அந்த நபரை இறக்கிவிட்டுவிட்டு தனது நண்பரை அழைத்துக்கொண்டு வர்சோவா கடற்கரைக்கு சென்றுள்ளார் என்றும் போலீஸார் தெரிவித்தனர். நிகிலும், அவரது நண்பரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருவரும் மது அருந்தி இருந்தனரா என்பது குறித்து தெரிந்து கொள்ள ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.