ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் கண்டோ பகுதியில் பதுங்கியிருந்த 9 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரின் கண்டோ பகுதியில் தேடுதல் வேட்டையை அண்மையில் நடத்திய போலீஸார்இவர்களைக் கைது செய்துள்ளனர். இத்தகவலை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் உறுதி செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் முகமது லத்தீப் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். அதாவது இந்த தீவிரவாத குழுவின் கமாண்டர் போல செயல்பட்டு வருகிறார். இவர்கள் அனைவரும்தற்போது கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த தீவிரவாத அமைப்பின் முக்கியக் குற்றவாளி லத்தீப்பும், அவருடைய கூட்டாளிகள் 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்தான் வெளிநாட்டுத் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் எல்லை வழியாக அழைத்து வருகின்றனர்.
சம்பா-கத்துவா பகுதி வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய இவர்கள் உதவுகின்றனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாத அமைப்பினர் வெளிநாட்டுத் தீவிரவாதிகளுக்கு தங்குமிடம், உணவு, ஆயுதங்கள் சப்ளைசெய்கின்றனர். மேலும் கைலாச மலையைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் அவர்கள் நுழைவதற்கும், தங்குவதற்கும் உதவி செய்கின்றனர்.
இந்த கைலாச மலைப்பகுதிதான் உதம்பூர், கத்துவா, தோடா ஆகிய 3 மாவட்டங்களுக்குள் நுழையும் முச்சந்தியாக உள்ளது.
இவர்களிடம் நடத்திய விசாரணையின்போதுதான் கண்டோ பகுதியில் அண்மையில் நடந்த என்கவுன்ட்டரில் 3 வெளிநாட்டுத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது தெரியவந்தது” என்றார்.