சிட்னி: மனித நாக்கின் நிறத்தை வைத்துநீரிழிவு, பக்கவாதம் போன்ற நோய்களை கணினி வழிமுறையில் 98%மிக துல்லியமாக கணிக்கலாம் என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள மத்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (எம்டியு) மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இதற்கான புதிய இமேஜிங் சிஸ்டத்தை வடிவ மைத்துள்ளன.
இதுகுறித்து இணைப் பேராசிரியர் அலி அல்-நாஜி கூறியதாவது: மனித நாக்கின் நிறத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நீரிழிவு,பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களை 98 சதவீதம் துல்லியத்தன்மையுடன் கணிக்கலாம்.
இதற்காக, மத்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தெற்கு ஆஸ்திரேலிய பல்கலையுடன் இணைந்து பிரத்யேகமான இமேஜிங் சிஸ்டத்தை உருவாக்கியுள்ளது. இதில் பொருத்தப்பட்ட கேமராக்கள் வாயிலாக 20 சென்டிமீட்டர் தூரத்தில் இருந்து நோயாளியின் நாக்கை படம்பிடித்து அதன் நிறம், வடிவம் மற்றும் தடிமன் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்ய முடியும். அந்த முடிவுகளின் அடிப்படையில், மனிதர்களுக்கு ஏற்படும் ரத்த சோகை, ஆஸ்துமா, கல்லீரல், பித்தப்பை பிரச்சினை, பிற வாஸ்குலர் பாதிப்புகள், இரைப்பைகுடல் நோய்கள், நீரிழிவு, பக்கவாதம், கோவிட் ஆகியவற்றை எளிதாக கண்டறிய முடியும். இதன் வாயிலாக அறியப்படும் முடிவுகள் 98 சதவீதம் துல்லியமானவையாக இருக்கும்.
பொதுவாக, நீரிழிவு நோயாளிகளுக்கு நாக்கின் நிறம் மஞ்சளாக இருக்கும். புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களின் நாக்கு ஊதா நிறத்திலும், அடர்த்தியான வழுவழுப்பு(க்ரீஸ் கோட்டிங்) பூச்சுடனும் காணப்படும். பக்கவாத நோயாளிகளின் நாக்கு பெரும்பாலும் வழக்கத்துக்கு மாறான சிவப்பு நிறத்தில் இருக்கும். ஒருவருக்கு நாக்கு வெள்ளையாக இருந்தால் அது ரத்தசோகையை குறிக்கும். அதேநேரம், மிக ஆழமான சிவப்பு நிற நாக்கு கோவிட்டையும், வயலட்நிற நாக்கு வாஸ்குலர் அல்லதுஇரைப்பை அல்லது குடல் பிரச்சினை அல்லது ஆஸ்துமாவை குறிக்கும்.
நாக்கின் நிறம், வடிவம் மற்றும் தடிமன் ஆகியவற்றைக் கொண்டு உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிவது என்பது சீன மருத்துவத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான முறை. அதனை அடிப்படையாகக் கொண்டுதான் இந்த ஏஐ கணினி பகுப்பாய்வு முறையும் உருவாக்கப்பட்டுள்ளத.
இவ்வாறு அலி அல்-நாஜி கூறினார்.