சென்னை: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 13 மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடர்ந்து 18-ம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், வங்கக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் இன்று முதல் 15-ம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 55 முதல் 65 கிமீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் பழனி, கொடைக்கானல் படகு குழாம், வேலூர் மாவட்டம் காட்பாடியில் தலா 7 செமீ மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.