வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாகிறது.
பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் டீ ஏஜிங் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட விஜய்யின் லுக்குடன் ‘ஸ்பார்க்’ பாடல் வெளியாகி டாக் ஆஃப் தி டவுனாகியிருந்தது. இத்திரைப்படம் எபிக், ஐமேக்ஸ் ஆகிய ஸ்கிரீன்களிலும் வெளியாகும் என்பதை ஸ்பெஷல் போஸ்டர்களோடு படக்குழு அறிவித்திருக்கிறது.
இப்படத்தின் ஆடியோ லாஞ்ச், டிரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதையொட்டி படக்குழு அடுத்தடுத்த அப்டேட்களை அதிரடியாக வெளியிடவுள்ளனர். வரும் இரண்டு வாரமும் ரசிகர்களுக்கு சரவெடியாகத்தான் இருக்கப்போகிறது.
இந்நிலையில் இந்த வார ஆனந்த விகடன் இதழில் பேட்டியளித்திருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு, ‘The G.O.A.T’ திரைப்படம் குறித்தும் படம் ஆரம்பிக்கும் போதே அஜித் சார் சொன்ன விஷயம் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில், “The G.O.A.T படம் ஆரம்பிக்கும் போதே அஜித் சார், ‘மங்காத்தா மாதிரி நூறு மடங்கு இருக்கணும், அப்படிப் பண்ணு’ன்னு சொன்னார். எவ்வளவு பெரிய மனசு இருந்தால் இந்த வார்த்தை வரும். அஜித் சார் சொன்ன மாதிரி செய்திருக்கோம்னு நினைக்கிறேன். மக்கள்தான் எத்தனை மடங்கு என்று படம் பார்த்துவிட்டு சொல்ல வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
மேலும், “‘The G.O.A.T படத்தின் கதை குறித்துப் பேசியிருக்கும் அவர், “The G.O.A.T கற்பனைக் கதைதான். ஆனா, நிஜத்திற்கு நெருக்கமா பண்ண முயற்சி பண்ணியிருக்கோம். SATS- னு பெயர். SPECIAL ANTI TERRORIST SQUAD-னு சொல்லுவாங்க. RAW அமைப்போட இணைஞ்சு வேலை செய்கிற குரூப் இது. அதில் ஒரு சமயத்துல சிறப்பாக வேலை செய்தவங்க சிலர்… அவங்க ஒரு காலத்தில் பண்ண விஷயம், இப்போ ஒரு பிரச்னையாக வந்து அவங்க முன்னாடி நிக்குது. அதை அவங்க எப்படி எதிர்கொண்டு ஜெயிக்கிறாங்கங்கறதுதான் படத்தோட மையக்கரு” என்று பேசியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
முழுப்பேட்டி நாளை வெளிவரும் ஆனந்த விகடன் இதழில்…