அஜித்தின் `வீரம்’, `வேதாளம்’, `விவேகம்’, சூர்யாவின் `கங்குவா’ உட்பட பல படங்களின் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி. இவர் தன் தந்தை பழனிசாமியின் வழியில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவராகவும், ஏர் முனை இளைஞர் அணியின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
அவரின் தந்தை என்.எஸ்.பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பேராசிரியரான மறைந்த பழனிசாமியை திருப்பூர், அவினாசி, பல்லடத்தில் உள்ள விவசாயிகள் பலரும் ‘என்.எஸ்.பி’ என்றும், ‘உழவர் காவலர்’ என்றும் அழைப்பார்கள்.
பேராசியர் என்.எஸ்.பழனிசாமியின் 82வது பிறந்தநாள் விழா மற்றும் மணிமண்டம் திறப்பு விழா கோவை பல்லடம் அருகே உள்ள வே.நாதகவுண்டன்பாளையத்தில் வருகிற 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை நடக்கிறது. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கிணத்துக்கடவு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் என்.எஸ்.பழனிசாமி. அதன் பின் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கமான ஏர்முனை விவசாயிகள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். அவரது மணிமண்டபத்தை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.
இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயல் தலைவராகவும், சினிமாவில் ஒளிப்பதிவாளராகவும் கவனம் ஈர்த்து வரும் வெற்றி பழனிசாமியிடம் பேசினோம்.
“விவசாய சங்கத்தைச் சேர்ந்தவங்களோட மணிமண்டபம் என்பது இரண்டு பேருக்கு மட்டுமே இருக்கு. ஒருத்தர் உழவர் உழைப்பாளர் கட்சி நாராயண சாமி நாயுடுவின் மணி மண்டபம். கோவை மாவட்டம் வையம்பாளையத்துல இருக்கு. சென்ற அ.தி.மு.க ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி அரசில் அதைத் திறந்து வச்சாங்க. இப்ப எங்க அப்பாவுக்குத் திறக்கவுள்ள மணிமண்டபம் என்பது, முழுக்க முழுக்க விவசாயப் பெருமக்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டிப் பண்ணியிருக்காங்க. விவசாயிகள் மட்டுமல்லாமல், விவசாய குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, தொழிலதிபர்களாகச் சிறந்து விளங்கும் பலரும் சேர்ந்து இந்த மண்டபத்தைக் கட்டியிருக்காங்க.
அப்பா கிராமப்புறப் பின்னணியிலிருந்து வந்து எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்தவர். இயற்கை விவசாயத்தை நேசித்தவர். நாட்டு மாடுகள் மீது அபரிதமான பிரியம் உள்ளவர். அவர் இறக்கற தறுவாயில் எங்க தோட்டத்துலேயே 100க்கும் அதிகமான காங்கேயம் நாட்டு மாடுகள் இருந்தது. கோவையிலுள்ள பி.எஸ்.ஜி. காலேஜ்லேயே படிச்சார். அங்கேயே பேராசிரியராகவும் ஆனார். அந்தச் சமயத்துல விவசாயப் போராட்டம் ரொம்ப தீவிரமா இருக்கும். உழவர் உழைப்பாளர் கட்சி நாராயணசாமி நாயுடு தலைமையில் பல போராட்டங்கள் நடக்கும். அவரது போராட்ட்டங்கள்ல ஈர்க்கப்பட்டு பேராசிரியர் வேலையை உதறினார். அதன்பின் விவசாய சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, பணியாற்ற ஆரம்பித்தார். திருப்பூர், கோவை, ஈரோடுனு ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்துக்குத் தலைவராக இருந்தார். அப்பாவை நாராயணசாமி நாயுடுவின் போர்ப்படைத் தளபதினுதான் சொல்வாங்க. 1970களுக்குப் பிறகு நடந்த விவசாயிகள் சங்கப் போராட்டத்தில் அப்பா பண்ணின போராட்டங்கள்ல பல போராட்டங்களை இப்பவும் எங்க பகுதி விவசாய மக்கள் ஞாபகமா சொல்லுவாங்க.
அந்தக் காலகட்டத்துல திருப்பூர் விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை பஸ்லதான் சந்தைக்கு எடுத்துட்டுப் போவாங்க. பஸ் ஸ்டாண்ட்டுக்கு எதிரேதான் காய்கறி மார்க்கெட் இருக்கும். பஸ் ஸ்டாண்ட்டுல இருக்கும் ஒரு கும்பல், பஸ்ல இருந்து அந்த காய்கறிகளை கீழே இறக்க விடமாட்டாங்க. அவங்களுக்குனு சுங்கம் (கப்பம்) கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துவாங்க. ஐந்து ரூபாய் பொருளுக்கு ரெண்டு ரூபாய் கப்பம் கட்டுவாங்க. அப்படி ஒரு கடுமையான பிரச்னை வந்தது.
அந்தச் சமயத்தில் எங்க அப்பா பழனிசாமி, பத்தாயிரம் விவசாயிகளை ஒன்று திரட்டி, மிகப்பெரிய போராட்டத்தை ஆரம்பித்து, சுங்கம் வசூலிக்கற கும்பலை விரட்டினார். திருப்பூர் மாவட்டத்தை சுத்தி இன்னிக்கு வரைக்குமே காய்கறி விவசாயம் இருக்குது. விவசாயிகள் அவங்களோட விளை பொருள்களை அவங்களே விற்பனை செய்யலாம் என்பதை 1980கள்ல அப்பா சாத்தியப்படுத்தினாங்கனு சொல்வாங்க. திருப்பூர் பகுதிகள்ல இன்னிக்கும் அப்பாவின் அடையாளமான ஒரு போராட்டம் இது.
அதைப் போல அவினாசி அருகே ஒரு இடம் இருக்கு. அங்கே கொள்ளையர்கள் நிறைந்த ஒரு இடம் இருந்தது. அந்த இடத்தைக் கடந்து செல்லும் விவசாயிகளின் வண்டிகளில் உள்ள பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளையடிப்பது வழக்கமா இருந்தது. திருப்பூர் விவசாயிகளைத் திரட்டி போராடினது மாதிரி, இங்கேயும் ஒரு போராட்டம் பண்ணி கொள்ளையர்களை அப்பா விரட்டி அடித்தார். அந்தப் போராட்டத்தின் போது அப்பாவின் கால்முட்டியை நோக்கி, கல்லை விட்டெறிந்ததில், அப்பாவின் கால் எலும்பு சேதமானது. கடைசி வரை அந்தப் பாதிப்பினால் விந்தி விந்திதான் நடந்தார்.
அதைப் போல 1990கள்ல திருப்பூர் பனியன் கம்பெனி வரவால், திருப்பூர் கிழக்குப் பகுதி, மேற்குப் பகுதி சாயத் தொழிற்சாலைகள் பெருகின. சுத்திகரிப்பு வசதி இன்மையால நிலத்தடி நீர் கலரா மாறிடுச்சு. தென்னை மரத்தில் இருந்த இளநீருக்கு பதிலா கலர் நீர் வர ஆரம்பிச்சிடுச்சு. இது உண்மை. அதே சமயம், திருப்பூர் தெற்குப் பகுதியில் இருந்து பொள்ளாச்சி வரைக்குமே இன்னிக்கு வரைக்கும் டையிங் தொழிசாலைகள் இல்லாமல் போனதற்கு அப்பா நடத்தின போராட்டங்களின் விளைவுதான் காரணம்.
1984ல நடந்த உழவர் உழைப்பாளர் கட்சி தேர்தலின் போது நாராயண சாமி மறைந்தார். அதன் பிறகு அப்பா, செல்லமுத்து எனப் பலரும் சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கினாங்க. 1989ல அப்பா பொங்கலூர் தொகுதியில் அ.தி.மு.க-வின் சேவல் சின்னத்துல போட்டியிட்டு வெறும் 440 ஓட்டு வித்தியாசத்தில் தோத்துட்டார். அதன்பின் 1991ல் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தச் சமயத்தில் முக்கியமான விஷயமா விவசாயிகளுக்கான இலவச மின்சார வசதியை சொல்லலாம். உலக வங்கியின் நெருக்கடியினால் அந்த வசதியை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ரத்து செய்தார். அப்ப அப்பா எம்.எல்.ஏ.வாக இருந்ததால, அப்பா அந்த இலவச மின்சாரத்தின் தேவை என்ன என்பதை முதல்வரிடம் வாதாடி, அந்த ரத்தை திரும்பப் பெற வச்சார்.
இன்னிக்கு வரை 22 லட்ச பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்க அப்பாவின் முயற்சிதான் காரணம். முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதாம்மா என எல்லோரிடமும் போராடியிருக்கார். அப்பாவோட இறுதிக் காலம் வரைக்குமே கொங்குமண்டலத்தோட விவசாயிகளின் சக்தியா இருந்தார். அப்பா அ.தி.மு.க கூட்டணியில் இருந்ததால, அ.தி.மு.க-வில் இருந்து எடப்பாடி பழனிசாமி சார் மணி மண்டபத்தைத் திறந்து வைத்தால் பொருத்தமாக இருக்கும்னு நினைச்சோம். அதை எடப்பாடி சார்கிட்டேயும் சொன்னோம். அவரும் மகிழ்ச்சியோடு ‘திறந்து வைக்க வர்றேன்’னு சொல்லிட்டார். இதன் பிறகு அப்பாவின் வாழ்க்கை வரலாற்றைத் தனிப் புத்தகமாகக் கொண்டு வரும் ஐடியாவும் இருக்கு” என நெகிழ்கிறார் வெற்றி பழனிசாமி.