புதுடெல்லி: பாதுகாப்பு படைகளின் பயன்பாட்டுக்காக அமெரிக்காவிடமிருந்து 31 ‘ஹன்டர் – கில்லர்’ டிரோன்களை வாங்கும் பேச்சுவார்த்தையில் இந்தியா மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
கிழக்கு லடாக் எல்லையில் சீனா கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறது. மேலும், பாகிஸ்தானுக்கு ‘சிஎச்-4’ மற்றும் விங் லூங்-2’ என்ற ஆயுதங்களுடன் கூடிய டிரோன்களை சப்ளை செய்து வருகிறது. பாகிஸ்தானிடம் ஏற்கனவே 10 சிஎச்-4 ரக டிரோன்கள் உள்ளன. இன்னும் 16 சிஎச்-4 டிரோனன்களை சீனாவிடமிருந்து பாகிஸ்தான் வாங்கவுள்ளது.
இதற்கு போட்டியாக அமெரிக்காவிடமிருந்து எம்க்யூ-9பி ரீப்பர் அல்லது ‘ப்ரீடேட்டர்-பி’ என அழைக்கப்படும் ஹன்டர்-கில்லர் டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த டிரோன்கள் 40,000 அடி உயரத்தில் தொடர்ந்து 40 மணி நேரம் பறந்தபடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு ஏவுகணைகளையும், குண்டுகளையும் இலக்கை நோக்கி துல்லியமாக வீசும் திறன் வாய்ந்தது. இந்த வகை டிரோன்கள், சீன டிரோன்களை விட மிகச் சிறந்தவையாக கருதப்படுகிறது.
இந்தியாவின் முப்படைகளின் பயன்பாட்டுக்கு 31 எம்க்யூ-9பி டிரோன்களை அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 31 டிரோன்களின் விலை 3.9 பில்லியன் டாலர் (ரூ.33,500 கோடி) என ஜெனரல் அடாமிக்ஸ் கூறியுள்ளது. இதன் விலையை குறைக்கும் பேச்சுவார்த்தையில் இந்திய குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்த பிறகு இந்த ஒப்பந்தம் இந்தாண்டுக்கள் இறுதியாகும் எனத் தெரிகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி எம்க்யூ-9பி டிரோன்களை ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து கொடுக்கும். இதற்கான சில பாகங்கள் இந்திய நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்படும். டிரோன்களை பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் மையமும் இந்தியாவில் அமைக்கப்படும்.
கொள்முதல் செய்யப்படும் 31 டிரோன்களில், 15 கடற்படை பயன்பாட்டுக்கும், தலா 8 தரைப்படை மற்றும் விமானப்படைக்கும் வழங்கப்படும்.