இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேர் தாயகம் திரும்பினர்

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 17 பேர் தாயகம் திரும்பினர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஜஸ்டின், ரெய்மெண்ட், ஹெரின் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளை ஜூலை 23ம் தேதி அன்று நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டிய குற்றச்சாட்டின்பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

3 படகுகளிலிருந்த காளீஸ்வரன், முருகானந்தம், ஜெகன், முத்துக்குமார், சீமான், ராஜ், சந்தியா ப்ருக்லின், சர்ப்ரசாதம், கருப்பையா, சுரேஷ் பாபு, காளிதாஸ், ரூபின், கண்ணன், ராஜேந்திரன், நடராஜ், சகாயம், சந்தியா, தீபன் குமார், குமார், செந்தில் வேல், தீபன் (இலங்கை அகதி) , சுதாகரன் (இலங்கை அகதி) ஆகிய 22 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஆகஸ்ட் 6-ம் தேதியன்று ஊர்காவல்துறை நீதிமன்றம் 22 மீனவர்களில், 19 மீனவர்களை விடுதலை செய்தும், 3 விசைப்படகு ஓட்டுநர்களான காளீஸ்வரன், கருப்பையா, ஜெகன் ஆகிய மூவருக்கு அபராதமும், தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்ட 19 மீனவர்களில் தீபன், சுதாகரன் ஆகிய இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் மீதமுள்ள 17 மீனவர்கள் மட்டும் புதன்கிழமை மாலை கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு புதன்கிழமை இரவு சென்னை வந்தடைந்தனர். பின்னர் மீனவர்கள் 17 பேரும் மீன்வளத் துறையினர் மூலம் தனி வாகனம் மூலம் ராமேசுவரத்துக்கு இன்று (ஆக.15) அழைத்து வரப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.