ஜெருசலேம்: இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் காரணமாக காசாவில் பாலஸ்தீனர்களின் உயிரிழப்பு 40,000-ஐ நெருங்குகிறது. இந்நிலையில் இரு தரப்பினர் இடையே சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் நடவடிக்கையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் நேற்று இறங்கின.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் தரப்பில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் காசா பகுதிக்குள் கடத்திச் செல்லப்பட்டனர். இதனால் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. கடந்த 11 மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த போரால் காசா பகுதியில் பாலஸ்தீனர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை 40,000-ஐ நெருங்குகிறது.
இஸ்மாயில் ஹனியே படுகொலை: இதனால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் ஏற்கனவே முயன்றன. ஆனால், ஹமாஸ்தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை காரணமாக இந்த பேச்சுவார்த்தை முயற்சி தடைபட்டது.
இந்நிலையில் கத்தாரில் இஸ்ரேல் குழுவினரை சந்தித்து பேசும் முயற்சியில் அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து பிரதிநிதிகள் நேற்று ஈடுபட்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து ஹமாஸ் அமைப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இஸ்ரேல்புதிய கோரிக்கைகளை முன்வைப்பதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இருதரப்பினர் இடையேசண்டை நிறுத்தம் ஏற்பட்டால் காசாவில் அமைதி நிலவும் என்றும், ஈரான் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்துவது தவிர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ்விடுவிக்கும் வாய்ப்புகளும் ஏற்படும்.
11 குழந்தைகளுக்கு அனுமதி: காசாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 11 குழந்தைகள் ஜோர்டானில் சிகிச்சை பெற இஸ்ரேல் அனுமதி வழங்கியது. குழந்தைகளுடன் பெண் ஒருவர் பாதுகாப்புக்குச் செல்லவும் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்கள் இஸ்ரேலின் கேரம் சலோம் எல்லை வழியாக அனுமதிக்கப்பட்டனர். 7 குழந்தைகள் ஆம்புலன்ஸ் மூலமும், மற்றவர்கள் பேருந்துகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்கான நடவடிக்கைக்கு உலக சுகாதார நிறுவனம் மற்றும் 2 அமெரிக்க தொண்டுநிறுவனங்கள் ஏற்பாடு செய்தன.