புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக அர்விந்த் கேஜ்ரிவால் இருக்கிறார். மதுபான கொள்முதல், விநியோகம், பார்கள் போன்ற விஷயத்தில் புதிய கொள்கையை டெல்லி அரசு அமல்படுத்தியது.
இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ரூ.100 கோடிக்கு மேல் கைமாறியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது.
இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிபிஐ கைது செய்த வழக்கில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 5-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மனுவை ரத்து செய்ததை எதிர்த்து கேஜ்ரிவாலின் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதாடினார்.
23-ம் தேதி விசாரணை: அதை கேட்ட நீதிபதிகள், ‘‘கேஜ்ரிவாலுக்கு உடனடியாக ஜாமீன் வழங்க முடியாது. இடைக்கால ஜாமீன் எதுவும் வழங்க முடியாது. நாங்கள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். இந்தவிவகாரத்தில் சிபிஐ பதில் அளிக்கவேண்டும்’’ என்று வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியிடம் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணை 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மதுபான கொள்கை முறைகேட்டு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 18 மாதங்களுக்குப் பிறகு அவர்சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.