கொல்கத்தாவில் கடந்த வாரம் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிகாலையில் 31 வயது பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இப்படுகொலையை கண்டித்து டாக்டர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் இச்சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று கொலை செய்யப்பட்ட மாணவியின் உறவினர்கள் சந்தேகப்படுகின்றனர். இச்சம்பவம் நள்ளிரவில் நடந்தது என்பதால் கொல்கத்தா டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று நள்ளிரவு மருத்துவமனைக்கு வெளியில் மெழுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் போராட அழைப்பு விடுத்திருந்தனர்.
இரவு 11 மணிக்கு பிறகு தொடங்கிய இப்போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது. அமைதியாக போராடிக்கொண்டிருந்தவர்கள் திடீரென தடுப்புகளை உடைத்துக்கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தனர். அவர்கள் அங்கிருந்த மேஜை மற்றும் நாற்காலிகளை அடித்து உடைத்தனர். அதோடு எமெர்ஜென்சி வார்டை அடித்து உடைத்து சூறையாடினர். மருத்துவமனைக்கு வெளியில் நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ் வாகனங்களும் அடித்து உடைக்கப்பட்டது. வெளியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது. போலீஸார் உடனே போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். அதோடு கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைத்தனர். இதில் பலர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தால் மருத்துவமனைக்கு வெளியில் போர்க்களம் போன்று மாறியது. போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் மருத்துவமனைக்கு அதிகாலை 2 மணிக்கு வந்தார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ”சோசியல் மீடியாவில் தவறாக பிரசாரம் செய்யப்பட்டதால்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. இவ்வழக்கில் போலீஸார் யாரையும் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை. போலீஸார் இவ்வழக்கில் என்ன செய்யவில்லை. வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது. நாங்கள் மிகவும் கோபத்தில் இருக்கிறோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. இக்குற்றத்தில் ஒருவர்தான் ஈடுபட்டார் என்று நாங்கள் சொல்லவில்லை. அறிவியல் பூர்வமான ஆதாரத்திற்காக காத்திருக்கிறோம். அதற்கு சற்று நேரம் பிடிக்கும். வதந்தியின் அடிப்படையில் முதுகலை பட்ட படிப்பு மாணவனை கைது செய்ய முடியாது.
மீடியா மூலம் அதிக நெருக்கடி வருகிறது. நாங்கள் ஆரம்பத்தில் இருந்து என்ன செய்கிறோமோ அது சரிதான். இப்போது சி.பி.ஐ விசாரிக்கிறது. சி.பி.ஐ.க்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்”என்றார்.
இச்சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.` எல்லை மீறி நடந்து கொண்டுள்ளனர் என்றும், வன்முறைக்கு காரணமானவர்களை 24 மணி நேரத்தில் கண்டுபிடிக்கும்படி கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பா.ஜ.க தலைவர்களின் ஒருவரான சுவந்து அதிகாரி வெளியிட்டுள்ள சோசியல் மீடியா செய்தியில், ”போராட்டத்தில் புகுந்த திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள் பாதுகாப்பான முறையில் வெளியேற போலீஸார் உதவி செய்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து ஆதாரங்களை அழித்துள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக நேற்று நள்ளிரவு படுகொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி வேண்டியும், பெண் பாதுகாப்பை வலியுறுத்தியும், பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் சேர்ந்து கொல்கத்தா நகர் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். அவர்கள் அனைவரும் பிஷ்வா பங்களா கேட் பகுதியில் ஒன்று கூடி போராடினர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு கூடினர். கொல்கத்தா மட்டுமல்லாது டெல்லி, மும்பை, ஹைதாராபாத் போன்ற நாட்டின் பல்வேறு பகுதியிலும் இப்போராட்டம் நேற்று இரவில் நடத்தப்பட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88