புதுடெல்லி: தேசப் பிரிவினையின்போது கடும் கொடுமைகளை எதிர்கொண்ட மக்களுக்கு, பிரதமர் மோடி நேற்று மரியாதை செலுத்தினார்.
1947 ஆகஸ்ட் 14-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட வன்முறையில் லட்சக்கணக்கான மக்கள்கொல்லப்பட்டனர். லட்சக்கணக் கானோர் வீடு இழந்தனர்.
அப்போது மக்கள் எதிர்கொண்ட கொடுமைகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14-ம் தேதி ‘தேசப் பிரிவினை கொடுமைகள் நினைவு தினம்’ அனுசரிக்கப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில், நான்காம் ஆண்டாக, நேற்று ‘தேசப் பிரிவினை கொடுமைகள் நினைவு தினம்’ நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
இதுகுறித்து பிரதமர் மோடிதனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “தேசப் பிரிவினையின்போது மக்கள் எதிர்கொண்ட கடும் கொடுமைகளை இந்ததினத்தில் நாம் நினைவுகூருகிறோம். அம்மக்களின் தைரியத்துக்கும் தாக்குப் பிடிக்கும் திறனுக்கும் நாம் மரியாதை செலுத்தும் தினம் இது. கடும் நெருக்கடிகளை எதிர்கொண்ட பிறகும், அம்மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பி வெற்றியும் அடைந்தனர். இன்றைய தினத்தில், நமது தேசத்தின் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் எப்போதும் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை எடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட பதிவில்,“பிரிவினையின்போது லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பெரும் துயரத்துக்கு ஆளாகினர். இந்த வரலாற்றை நாம் நினைவுகூர வேண்டும். தன் வரலாற்றை நினைவுகூரும் தேசமே, வலுவான நாடாக தன்னை உருவாக்கிக் கொள்ள முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரிவினையின்போது நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து, இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திரா காந்தி தேசிய கலை மையம் இணைந்து ஏற்பாடுசெய்த டிஜிட்டல் கண்காட்சி பல இடங்களில் திரையிடப்பட்டது.