மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதி மீறல்கள் தொடர்பாக இதுவரை பத்து முறைப்பாடுகள் பதிவு…

ஜனாதிபதி தேர்தல் 2024 இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 26.07.2024 அன்றிலிருந்து இன்று (ஆகஸ்ட் 15) வேட்புமனுத்தாக்கலுக்கான இறுதித் தினம் வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக இதுவரை 10 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமையப்பெற்றுள்ள தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகம் அறிவித்துள்ளது.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அரச உத்தியோகத்தர்களது இடமாற்றம், பதவி உயர்வு, பரீட்சை நடாத்துதல், மற்றும் சேவை நீடிப்பு போன்றவை தொடர்பாக ஏழு முறைப்பாடுகளும், தேர்தல் தொடர்பான ஊர்வலம் மற்றும் கூட்டம் தொடர்பாக ஒரு முறைப்பாடும், அசையும் அசையாச் சொத்துகளின் முறைகேடான பாவனை, காணி பகிர்ந்தளித்தல் தொடர்பாக மற்றுமொரு முறைப்பாடும் திறப்பு விழா குறித்த மேலுமொரு முறைப்படும் என மொத்தம் 10 பதிவாகியுள்ளன.

இவற்றில் மண்முனை வடக்கில் 4 முறைப்பாடுகளை, கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று மத்தி ஆகியவற்றில் தலா இரண்டு முறைப்பாடுகளும், கோறளைப்பற்று தெற்கு கிரான், ஏறாவூர் பற்று ஆகிய பிரிவுகளில் தலா ஒரு முறைப்பாடுமாகப் பதிவாகி இருக்கின்றன.

இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள இம்முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதி மீறல் குற்றத்தின் அடிப்படையில் சாதாரண தரமுடையவை எனவும், இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகம் மாவட்ட அரச ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.