கயல்விழி பாண்டியன் (கீர்த்தி சுரேஷ்) வள்ளுவன் பேட்டையிலுள்ள மதராஸ் வங்கியின் ஊழியர். இந்தித் திணிப்புக்கு எதிரான போராளியாக இருப்பவர், க.பாண்டியன் எனும் ஆண் அடையாளத்தில் புரட்சிகர கதைகள் எழுதும் எழுத்தாளரும்கூட. அதே ஊரில் மின்சாரத் துறையில் பணிபுரியும் தமிழ்ச்செல்வன் (ரவீந்திர விஜய்), கயல்விழியின் புத்தகங்களைக் கடன் வாங்கிப் படிப்பதோடு, அவரின் எழுத்துக்கும், சிந்தனைக்கும் ரசிகன் என்பதாகத் தன்னை முன்னிறுத்துகிறார். இந்தச் சூழலில் கயல்விழியின் தாத்தாவுக்குப் புற்றுநோய் என்பது தெரியவர, கயல்விழி உடனடியாக திருமணம் செய்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்படுகிறார். அதனால் தன் கருத்தோடு ஓரளவு ஒத்துப்போகும் தமிழ்செல்வனைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார். அந்த முடிவு சரியானதா, அதில்வரும் சிக்கல்கள் என்னென்ன, அதை கயல்விழி எவ்வாறு சமாளிக்கிறார் என்பதே ‘ரகு தாத்தா’ படத்தின் கதை.
“இந்தி தெரியாது போயா” என்று அடித்துப்பேசுவது, ஆணாதிக்கத்துக்கு எதிராக வெடுக்கென வெளுத்து வாங்குவது என கயல்விழி பாண்டியனுக்கு தன் சிறப்பான உடல்மொழியால் உயிர் கொடுத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஆங்காங்கே அவர் செய்யும் குறும்புத்தனமான பாவனைகள் ரசிக்க வைக்கின்றன. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தவிக்கும் பாத்திரத்தில் ரவீந்திர விஜய் ‘பொறுத்திரு செல்வா’ என நடிப்பில் கலகலத்திருக்கிறார். தேவையான இடத்தில் கெமிஸ்ட்ரி, தேவையான இடத்தில் வெறுப்பு என மாறி மாறி அந்தக் கதாபாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டு லைக்ஸ் அள்ளுகிறார். “பேத்திக்கு ஏத்தத் தாத்தா” எனச் சொல்லும் அளவுக்கு அசால்ட்டாக கைதட்டல்கள் வாங்குகிறார் எம்.எஸ்.பாஸ்கர். அவர் போடும் ஒன்லைனர்கள் ‘கிச்சு கிச்சு’ அதகளம். அதேபோல இஸ்மாத் பானுவும் தன் பங்குக்கு ஊசி வெடிபோல ஆங்காங்கே சிரிப்பு வெடிகளைப் பற்றவைக்கிறார். தேவதர்ஷினி, ஜெயக்குமார், ஆனந்த் சாமி ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.
1969-ம் ஆண்டு நடக்கும் பீரியட் கதை… அதற்கான ரெட்ரோ உணர்வைப் பசுமையாகக் கடத்தியிருக்கிறது ஒளிப்பதிவாளர் யாமினி யக்ஞமூர்த்தியின் கேமரா. பெரும்பாலும் சிறிய அறைக்குள் நடக்கும் காட்சிகளைச் சிறப்பான காட்சி வடிவமைப்பால் ரசிக்க வைத்திருக்கிறார். அவரது ரசனையான கலர் பேலட்டுக்குக் கூடுதல் வலு சேர்க்கும் விதமாக இருக்கும் ஆடை வடிவமைப்பாளர்கள் பூர்ணிமா மற்றும் ஸ்ருதி மஞ்சரியின் உழைப்பும் பாராட்டத்தக்கது. பேருந்து, ஸ்கூட்டர், ஆங்காங்கே வரும் போர்டுகள், ஹோட்டல்கள், சபா, ஏன் பின்னாலிருக்கும் நாட்காட்டிக்குக்கூட அத்தனை மெனக்கெடல் என்பதாகத் தயாரிப்பு வடிவமைப்பாளர் ராம்சரண்தேஜ் லபானி, அந்தக் கால உலகுக்கே நம்மைக் கைபிடித்துக் கூட்டிச் சென்றிருக்கிறார்.
இத்தகைய அழகிய பிரேம்களை கச்சிதமாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் டி.எஸ். சுரேஷ். ஆனால் அழகியலை அருமையாகக் கோர்த்தவர் திரைக்கதையின் தொய்வான பகுதிகளில் கத்திரியை இன்னும் கூடுதலாகப் பயன்படுத்தியிருக்கலாம். “பீல் குட் இது நமது ஏரியா” என்று பின்னணி இசையில் அடித்து ஆடியிருக்கிறார் ஷான் ரோல்டன். ஆனால் அதில் ஒரு சில பந்துகள் பேட்டில் படாமல் பீட்டனும் ஆகியிருக்கின்றன. பாடல்கள் கதையின் போக்கிலேயே வந்து மாண்டேஜுக்கு உதவியிருக்கின்றன. இருப்பினும் முணுமுணுக்க வைக்கின்ற ரகத்தில் இல்லை என்பது மைனஸ்தான்.
கதைக்களம், கதாபாத்திர அறிமுகம் என விரியும் ஆரம்ப காட்சிகள் புது உலகினை செட் செய்து கதைக்குள் நுழைகிறது. இந்தித் திணிப்பு, பெண்ணியம் என்ற நாயகியின் குணாதிசயங்களை விளக்கும் காட்சிகள் வேலை செய்தாலும், அதன் ரீப்பீட் தன்மை “அடுத்து என்ன?” என்ற ஆர்வத்தைத் தூண்டவே இல்லை. மொழி தெரியாமல் வங்கி மேலாளர் ராஜீவ் ரவீந்திரநாதன் பேசும் காட்சி, எம்.எஸ் பாஸ்கரின் காமெடி பன்ச்கள் எனப் படத்தின் பாதி நகைச்சுவைக் காட்சிகள் கிளிக் ஆகியிருக்கின்றன.
பார்வையாளருக்கு ட்விஸ்ட்டினை முன்னரே தெரியவைத்து கதாபாத்திரத்துக்கு அது தெரியாமல் விளையாடும் நகைச்சுவை கண்ணாமூச்சி ஆட்டத்தில், இயக்குநர் சுமன் குமார் திரைக்கதையில் சுவாரஸ்யம் சேர்த்தாலும், வசனகர்த்தா மனோஜ் குமார் கலைவாணன் பல இடங்களில் அதனைத் தொடர் ஓட்டமாகக் கொண்டு செல்லும் வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறார். ஒரு நகைச்சுவை சரவெடிக்குத் தகுந்த திரைக்கதை இருந்த போதிலும் வசனத்திரிகள் சரியாகப் பற்றத்தால் சிரிப்பொலிகள் குறைந்திருக்கின்றன. அதனால் இந்தப் பக்கம் நம் கரவொலிகளும் குறைந்திருக்கின்றன. இருந்தும் இடைவேளை கடிதக்காட்சி யோசனை அடிப்பொலி. இதற்காகவே பொறுத்திருந்தோம் செல்வா!
எந்தக் காலமானாலும் ஆணாதிக்கம், திணிப்பு, வரதட்சணை என்கிற ஆதிக்கத்தை எதிர்க்கப் பெண்கள் இருந்தார்கள், போராடினார்கள் என்பதைக் கதையின் போக்கிலேயே திணிப்பில்லாமல் கூறிய இயக்குநருக்குப் பாராட்டுக்கள். இருப்பினும் திரைக்கதையின் இரண்டாம் பாதியில் பொறுமையாக நடக்கும் இந்த ‘ரகு தாத்தா’ இன்னும் சற்றே வேகம் காட்டியிருக்கலாம். தமிழ்ச்செல்வனின் தாயார் திடீரென மனமாற்றம் அடைந்தது எப்படி, கொள்கையை விட்டுவிட்டு இந்திப் பரீட்சை எழுதும் கயல்விழி, கொள்கையை மீறும் தாத்தாவிடம் மட்டும் கோபம் கொள்வது ஏன் போன்ற லாஜிக்கற்ற காட்சிகளும் படத்தில் தொக்கி நிற்கின்றன. இருந்தாலும் கடைசி 20 நிமிடங்கள் அமர்க்களமான காமெடி டிராமாவாக, நம்மை ஓரளவுக்குச் சிரிக்க வைத்து ஆறுதல் அளிக்கிறது.
நடிப்பிலும் மேக்கிங்கிலும் நம்மை ஈர்க்கும் இந்த ‘ரகு தாத்தா’, திரைக்கதை மற்றும் வசனத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘நகைச்சுவை தர்பார்’ நடத்திப் புறக்கணிக்கமுடியாத வெற்றியைப் பெற்றிருப்பார்.