துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியான நாடார் மேல் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தலைமையாசிரியராக ஜான் கணேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்கள், இடை நிலை ஆசிரியர்கள் என 32 பேர் பணியாற்றுகின்றனர். இங்கு பணிபுரியும் ஆசிரியர்களிடம் வருமான வரி கட்டுவதற்காக, பணத்தை பெற்று அதை ஸ்டேட் பாங்க்கில் செலுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. தலைமையாசிரியரின் அறிவுறுத்தலின்பேரில், இதே பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் தங்கமாரியப்பன் என்பவர் மூலம் இதை நடைமுறைப் படித்தி வந்துள்ளனர்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வருமான வரித்தொகை பிடித்தம் செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில், இப்பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர் வீட்டு கடன் வாங்குவதற்காக வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு வருமான வரித்துறை ரசீதுகளை கொடுத்தபோது, பள்ளியிலிருந்து கொடுத்த ரசீது போலியானது என வங்கியின் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து, பள்ளிக்கு வந்து தலைமைாசிரியர் மற்றும் சக ஆசிரியர்களிடம் விவரத்தை கூறியுள்ளார். இதனால், மற்ற ஆசிரியர்களும் வருமான வரி செலுத்துவதற்காக கொடுத்த பணத்தை வங்கியில் சென்று சரி பார்த்துள்ளனர்.
அதில், அவர்களுக்கு சந்தேகம் வந்தது. இதனையடுத்து கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜனை ஆசிரிய, ஆசிரியைகள் சந்தித்தனர். அங்கு தலைமையாசிரியர் ஜான் கணேஷ் கையெப்பமிட்டு, வருமான வரிக்கு பணம் செலுத்தியதாக ஆவணத்தை காட்டியுள்ளனர். நகலும் வழங்கி இருக்கிறார்கள். அந்த ஆவணத்தைக் கொண்டு வங்கிக்கு ஆசிரியர்கள் சென்றுள்ளனர்.
அங்கு அந்த ரசீது போலியானது என்று வங்கி அதிகாரிகள் கூறினர். இதைக் கேட்டு, ஆசிரியர், ஆசிரியைகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, ஆசிரியர்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் தலைமையாசிரியர் ஜான் கணேஷ் மீது புகார் செய்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியின் இளநிலை உதவியாளர் தங்கமாரியப்பன் விஷம் குடித்துவிட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். இதனால், போலீஸாரின் விசாரணை தாமதமாகி வருகிறது.
இந்தப் பிரச்னை குறித்து தலைமையாசிரியர் ஜான் கணேஷிடம் பேசினோம், “ ‘நானும் இதில் பாதிக்கப்பட்டு உள்ளேன். ஆசிரியர்களுக்கு சம்பளம் போடுவதற்காக இளநிலை உதவியாளர் தங்கமாரியப்பன் கொடுத்த வருமான வரி பில்லில் கையெழுத்து போட்டேன். நானும் தங்க மாரியப்பன் மீது புகார் அளித்துள்ளேன். இந்தப் பிரச்னை குறித்து ஆசிரியர்களிடம் பேச முயற்சி செய்வதற்கு முன்பாகவே அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டனர், இதற்கு முன்பிருந்த தலைமை ஆசிரியர்கள் பின்பற்றிய வழிமுறையைத்தான் நானும் பின்பற்றி, தற்போது நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்” என்றார்.
இது குறித்து பள்ளி நிர்வாக தரப்பில் கேட்டபோது, “தனி நபர் முறைகேடு செய்துள்ளார். 17 ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் வருமான வரி கட்டுவதற்கு பணம் கொடுத்துள்ளனர். சில ஆசிரியர்கள் தாங்களாகவே வருமான வரியை கட்டியுள்ளனர். அதில், சில ஆசிரியர்களுக்கு ஓர் ஆண்டு, சிலருக்கு 3 ஆண்டுகள்கூட வருமான வரி கட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த மோசடிக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் சம்பந்தம் இல்லை.
இளநிலை உதவியாளர் தங்கமாரியப்பன்தான் போலி ஆவணங்களை உருவாக்கி மோசடி செய்துள்ளார். அவர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் தலைமையாசிரியரும் புகார் செய்துள்ளார். மோசடி செய்ததாக கூறப்படும் தங்கமாரியப்பனிடம் இப்ப பிரச்னை குறித்து கேட்க பலமுறை அவருடைய செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு போதும், அவர் போனை எடுக்கவில்லை. ” என்கிறார்கள்.
இந்த மோசடி சம்பவம் குறித்து கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபிரகாஷிடம் கேட்டபோது ”இது குறித்த புகாரின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். கடந்த நான்கு ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வருமானவரித்துறைக்கு செலுத்த வேண்டிய பணம் ரூபாய் 1.5 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளதாக ஆசிரியர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வருமான வரி செலுத்தவில்லை என்றால் அபராத தொகையுடன் திரும்ப செலுத்த வேண்டி வரும். அதனால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். பள்ளி நிர்வாகம் தங்களுக்கு இதில் தொடர்பில்லை என்று தெரிவித்துவிட்டது, பள்ளி தலைமையாசிரியர் நானும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று கூறுகிறார். குற்றம் சாட்டப்பட்டவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்று உள்ளார். ஆனால் பணம் கொடுத்த ஆசிரியர்களோ நடுத்தெருவில் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பள்ளியில் இருந்து கொடுக்கப்பட்ட ஆவணம் உண்மையானதா என்பதனை ஆய்வு செய்யாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக எப்படி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை கல்வித்துறை அதிகாரிகள் விடுவித்தனர் என்ற சந்தேகமும் எழுகிறது.
ஆசிரியர்களுக்கு கொடுத்த வருமானவரித்துறை நகலும் போலி, கல்வித்துறைக்கு அளித்த ஆவணங்களும் போலி, இப்படி ஒட்டுமொத்த முறைகேடுகள் நடைபெற்ற நிலையில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறோம் என்ற ஒற்றைச் சொல்லில் அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒழுக்கத்தையும் நேர்மையும் சொல்லித் தர வேண்டிய ஆசிரியர்களுக்கே மோசடி நடைபெற்ற இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88