இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ,ஏர்டெல், மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இந்த நடவடிக்கையை அடுத்து, அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி தங்கள் கவனத்தை திருப்ப ஆரம்பித்துள்ளனர்.
பிஎஸ்என்எல் (BSNL) இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்து, தனது 4G சேவைகளை நாட்டில் வேகமாக விரிவுபடுத்துகிறது. நாடு முழுவதும் மிக விரைவில் 4ஜி சேவை தொடங்கப்படும் என அறிவித்த பிஎஸ்என்எல், உடனடியாக 15 ஆயிரத்திற்கும் அதிகமாக 4ஜி நெட்வொர்க் டவர்களை நிறுவி, தனது பணியை துரிதப்படுத்தியது.
ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துள்ள தொலைத்தொடர்புத் துறை
தற்போது பிஎஸ்என்எல் 4ஜி சில மாநிலங்களில் இயங்கி வரும் நிலையில், விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை விரிவுபடுத்த வேண்டும் என்பதே பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் இலக்கு. இந்நிலையில்,தொலைத்தொடர்புத் துறை (DoT), தனது X தளத்தில் ஒரு ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துள்ளது. DoT “தன்னிறைவு பெற்ற இந்தியாவின் 4G-BSNL… விரைவில் உங்களுக்கு அருகிலுள்ள அவுட்லெட்டுகளில்” என பதிவிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனமும் இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ளது.
ஆகஸ்ட் 13 அன்று எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்
அதிக வேக 4ஜி இண்டர்நெட்டிற்கான ஆதாரத்தை காட்டும் வகையில், தொலைத்தொடர்புத் துறை பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டில் ஆகஸ்ட் 13 தேதி காட்டப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரியும் நிலையில், அறிவிப்பிற்காக மக்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் 6ஜி சோதனை திட்டம்
சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்தார். நாடு வேகமாக 5ஜியை ஆரம்பித்துவிட்டதாகவும், தற்போது 6ஜி தொழில்நுட்பத்தை சோதனை முறையில் உருவாக்கி வருவதாகவும் கூறினார்.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் அறிவிப்பு
சமீபத்தில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வரும் அக்டோபர் இறுதிக்குள் சுமார் 80,000 4ஜி டவர்களும், 2025 மார்ச் மாதத்துக்குள் சுமார் 21,000 5ஜி டவர்களும் நிறுவப்படும் என்றும் சிந்தியா தெரிவித்தார். மேலும், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவையும் சோதனை கட்டத்தில் உள்ளதாக கூறிய நிலையில், 5G பற்றிய விவாதம் முழு வீச்சில் தொடங்கியது. 4ஜி அறிமுகம் ஆன 6 முதல் 8 மாதங்களுக்குள் 5ஜி சேவையைத் தொடங்கும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பிரதமர் மோடியும் 6ஜி தொடர்பாக முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சில மாநிலங்களில் BSNL 4G சேவை இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும், படிப்படியாக விரிபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.