India National Cricket Team Latest News Updates: இந்திய கிரிக்கெட்டில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் கிடைப்பது என்பது மிக மிக அரிதாகும். எப்போதும் தரமான சுழற்பந்துவீச்சாளர்கள் வண்டி வண்டியாக கிடைப்பார்கள். லெக் ஸ்பின்னர்கள், ஆப் ஸ்பின்னர்கள் மட்டுமின்றி இடது கை ஸ்பின்னர்கள், மிஸ்ட்ரி ஸ்பின்னர்கள், சைனாமேன் ஸ்பின்னர்கள் என விதவிதமாக கிடைப்பார்கள். அதேநேரத்தில் வேகப்பந்துவீச்சை பார்த்தோமானால் நிலைமை சற்று மோசம்தான்.
இந்திய அணியில் (Team India) சர்வதேச தரத்தில் இப்போது இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள் என்றால் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, சிராஜ் ஆகியோரை மட்டுமே குறிப்பிட முடியும். இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் பெரிதாக இப்போது விளையாடுவதில்லை. சிராஜ் கூட இன்னும் நிறைய போட்டிகள் விளையாட வேண்டியுள்ளது. இதுதான் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சின் நிலைமை. இடதுகை வேகப்பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்தவர்கள் என யாருமே இல்லை. அதுவும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமலேயே உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விளையாடி வருகிறது.
முகமது ஷமி இல்லை
அதிலும் இப்போது முகமது ஷமி (Mohammed Shami) காயத்தில் சற்று மீண்டு வருகிறார். அவர் இன்னும் முழு உடற்தகுதி பெற்றுவிட்டாரா என்பது தெரியவில்லை. தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் முகமது ஷமி பந்துவீசுவதை தொடங்கிவிட்டதாகவும், தொடர்ந்து பந்துவீச்சில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவது அவரது உடற்தகுதியை பொறுத்துதான் என செய்தியாளர்கள் சந்திப்பில் கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
மேலும், காயமடைந்து மீண்டும் சர்வதேச போட்டிகளை இந்திய வீரர்கள் விளையாட வேண்டும் என்றால் உள்ளூர் தொடர்களில் விளையாடி ஃபார்மை நிரூபிக்க வேண்டும் என பிசிசிஐ கடுமையாக தெரிவித்திருக்கிறது. தற்போது ஜடேஜா துலிப் டிராபியில் (Duleep Trophy 2024) விளையாடி ஃபார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இப்படியிருக்க இந்த துலிப் டிராபியில் ஷமி தேர்வு செய்யப்படவில்லை. எனவே அவர் வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் களமிறங்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது. அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் நேரடியாக களமிறங்கலாம் என தெரிகிறது.
இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்கள்
தற்போது ஷமி விளையாடாத சூழலில் இந்த மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் முதல்முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள் எனலாம். தற்போது இந்த மூன்று வீரர்கள் துலிப் டிராபி தொடரில் விளையாட உள்ளனர். இவர்கள் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் 2 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனலாம்.
அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா ஆகியோர்தான் அந்த மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் ஆவார். இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களாக தற்போது அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) மற்றும் கலீல் அகமது (Kaleel Ahmed) மட்டுமே உள்ளனர். இவர்கள் ரெட் பாலில், அதுவும் புதிய பந்து மற்றும் பழைய பந்தில் தங்களது திறனை எப்படி வெளிப்படுத்திகிறார்கள் என்பதை தேர்வுக்குழு கூர்ந்து நோக்கும். பழைய பந்தை ரிவர்ஸ் செய்வதில் அர்ஷ்தீப் சிங் கைத்தேர்ந்தவர் ஆவார். அதே நேரத்தில் ஹர்ஷித் ராணா (Harshit Rana) சீமை (Seam) பிடித்து ஷமி போல் வீசுவதில் வல்லவர். இவரிடம் வேகமும் இருக்கும். துலிப் டிராபியில் இவர் தனது திறனை நீருபித்துவிட்டால் டெஸ்ட் அணிக்கான டிக்கெட் கிடைத்துவிடும்.