போர்த்துகீசிய பெரியவரின் பின்கதை, ஒரே அறையில் மாட்டிக்கொள்ளும் நால்வர், தொலைக்காட்சியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னரும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தவர்கள் மரணிப்பது என்று பின்னப்பட்ட முதல் பாகத்தின் அடுத்த கட்டமே இந்த `டிமான்ட்டி காலனி 2′.
முதல் பாகத்துக்கு ஆறு வருடங்களுக்கு முன்னர் தொடங்கும் இந்தக் கதையில் டெர்பியின் (பிரியா பவானி ஷங்கர்) காதல் கணவரும் அவரின் நண்பர்களும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆறு வருடங்களுக்குப் பிறகும் அவரைப் பிரிந்த துயரம் தாங்காமல் சீனத் துறவி ஒருவரின் உதவியுடன் அவரின் ஆவியிடம் பேச முயல்கிறார் டெர்பி. இந்த முயற்சி டெர்பியை முதல் பாகத்தின் நாயகன் சீனிவாசனின் (அருள்நிதி) கதையோடு இணைத்துவிட, இறந்துவிட்ட அவரை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு ஒன்று உருவாகிறது. சீனிவாசனின் பின்கதையை ஆராய்கையில் அவருக்கு ரகு (இன்னொரு அருள்நிதி) என்ற சகோதரன் இருப்பது தெரிய வருகிறது. டெர்பி – ரகு கூட்டணி, சீனத் துறவி மற்றும் நண்பர்கள் உதவியுடன் சீனிவாசனை மீட்டதா, அவர்களைத் துரத்தும் ஆபத்து நிஜத்தில் என்ன என்பதற்கெல்லாம் நீட்டி முழக்கி விடைகள் சொல்கிறது படம்.
காதல் கணவரை இழந்த துயரம், அமானுஷ்யங்களில் மாட்டிக்கொள்ளும் இடங்களில் பதற்றம், புதிர்களைப் புரிந்து கொள்ளும் சாமர்த்தியம் என பிரியா பவானி ஷங்கர் தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகமான திரை நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார். சுயநலம் கொண்ட மனிதன், ஆனால் கெட்டவன் கிடையாது, பணத்தின் மீது ஆசை, உயிர் பயம் என நெகட்டிவ் நிழல் படிந்த ரகு பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் அருள்நிதி. இரட்டை வேடம் என்றாலும் மற்றொரு பாத்திரத்துக்குப் பெரிதாக வேலையில்லை. கதையோடு முழுக்க முழுக்க பயணிக்கும் பாத்திரத்தில் சித்தப்பா (முத்துக்குமார்) சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். வெகுநாள்களுக்குப் பிறகு திரையில் பார்க்கும் அருண் பாண்டியனுக்குச் சிறப்பான கம்பேக் இது கிடையாது. சீனத் துறவிகளாக வருபவர்கள் நடிப்பில் குறையேதுமில்லை.
பேய்ப் படங்களின் பிளஸ்ஸான சைலன்ஸ்க்கு வழி கொடுக்காமல் வாசித்துக் கொண்டே இருக்கிறார் சாம் சி.எஸ். முதல் பாகத்தின் பெரிய பலமே அந்த ஒலிப்பதிவில் வரும் இடி முழக்கமே. அது மற்ற இரைச்சல்களுக்கு மத்தியில் தனியாகத் தெரியாமல் பத்தோடு பதினொன்றாக மறைந்து போவது பெரிய மைனஸ். போர்த்துகீசிய நபர் வருகிறார் என்ற பீதியே இதில் சுத்தமாக மிஸ்ஸிங்! பறக்கும் வௌவால்கள், டிமான்ட்டி காலனி ஆவிகளின் தனி உலகம், அதில் தவிக்கும் ஆவிகள் என வரைகலை பயன்படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம் இன்னும் சிரத்தை எடுத்திருக்கலாம். அது படத்தின் நம்பகத்தன்மையைச் சுத்தமாக காலி செய்திருக்கிறது.
ஒளிப்பதிப்பாளர் ஹரீஷ் கண்ணன் உறையும் ஃப்ரீஸ் பிரேம்கள், ஸ்லோ மோஷன் ஷாட்கள், கண்ணாடி பேராடக்ஸ் ஷாட்கள் என நம்மைக் கவனிக்க வைக்கிறார். மீன் தொட்டி உடைந்து விழுகிற இடம், க்ளைமாக்ஸ் மருத்துவ அறை காட்சிகள் சிறப்பாகவே படமாக்கப்பட்டுள்ளன. பழைய கதையை புதிய கதையோடு சிறப்பாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் குமரேஷ்.டி. ஆனால் நீளும் முதல் பாதியின் திரை நேரத்தை இன்னும் குறைத்திருக்கலாம்.
பட்டினப்பாக்கத்தின் சிறிய அறைக்குப் பதிலாக, இங்கே பெரிய சீன உணவகம், சின்ன டிவிக்குப் பதிலாகப் பெரிய ஸ்மார்ட் தொலைக்காட்சி என்று பட்ஜெட் பெருகியிருப்பதை உணர்த்துகிறது திரைக்கதை. முந்தைய பாக அருள்நிதியை உயிரோடு கொண்டு வரும் இரட்டையர்கள் யோசனை, கண்கள் ஏன் வெள்ளையாக மாறுகின்றன, லைப்ரரியன் கதை, ஆறு வருடங்களுக்கொரு முறை பலி கொடுப்பது எனச் சில ஐடியாக்கள் கவனிக்க வைக்கின்றன. இருந்தும் குவாண்டம் பிசிக்ஸ் அறிவியலை எல்லாம் பேய்க்கதைக்குச் சாட்சி சொல்ல துணைக்கு அழைப்பது சுத்த போங்கு பாஸ்! அதேபோலப் படத்தின் ஆரம்பத்தில் ‘Found Footage’ படப் பாணியில் தொடங்கும் காட்சிகள் திகில் விருந்து என்றாலும் அதன் பிறகு வரும் காட்சிகளில் அந்த உணர்வு சுத்தமாக மிஸ்ஸிங்!
“கண்ணாடிய திருப்புனா எப்படி ஜீவா வண்டி ஓடும்” என்ற கணக்காக… இது அதோட கனெக்டட், அது இதோட கனெக்டட் என இஷ்டத்துக்கு ரயில் பெட்டியை இணைத்து நம்மை எங்குமே கனெக்ட் ஆகாமல் செய்துவிடுகிறது திரைக்கதை. இரண்டாம் பாதியில் வழக்கமாக வைக்கப்படும் கோயில் பூஜை யாகத்துக்குப் பதிலாக இங்கே புத்தர் பூஜையை வைத்திருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. மற்றபடி இதில் புதிதாக எதுவுமில்லை என்பதுதான் சிக்கலே! க்ளைமாக்ஸும் திகில் கிளப்பி பெரிய சஸ்பென்ஸ் உணர்வினைக் கொடுக்காமல், அடுத்த பாகத்துக்கான லீடோடு சம்பிரதாய முடிவாகத் திருப்திப்பட்டுக் கொள்கிறது.
சென்ற பாகத்தின் சுவாரஸ்ய நிகழ்வினைச் சற்றே மாற்றிக் கொடுத்திருக்கும் இந்த `டிமான்ட்டி காலனி 2’, ஹாரர் பிரான்சைஸாக மாற்றுவதற்காகவே எடுக்கப்பட்ட மற்றுமொரு ஹாரர் சினிமா!