Thangalaan: "பொன்னியின் செல்வன் வீரத்தையும், தங்கலான் வறுமையையும் பேசுகின்றன!" – நடிகர் விக்ரம்

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

ஒவ்வொரு திரைப்படங்களிலும் புதுப்புது பரிணாமங்கள் எடுத்து, முழுமையாகத் தன்னையே அர்ப்பணித்து நடித்து வருபவர் விக்ரம். ‘சேது’ தொடங்கி தற்போது ‘தங்கலான்’, ‘வீர தீர சூரன்’ எனத் தற்போது வரை அவரது அர்ப்பணிப்பைத் தொடர்கிறது. தங்கலான் படத்தின் வெளியீட்டையொட்டி பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்று வருகிறது படக்குழு. அவ்வகையில் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கும் விக்ரம், பா.இரஞ்சித்தின் இயக்கம் குறித்தும் ஜி.வி.பிரகாஷின் இசை குறித்தும் பேசியிருக்கிறார்.

Thangalaan | தங்கலான்

நடிகர் விக்ரம், “பொன்னியின் செல்வன் படத்தில் வீரம், வெற்றி, தோல்வி என 1000 வருஷத்திற்கு முன்னால் நடந்ததைப் பேசியிருந்தோம். அதன் பிறகு இந்தியாவில் 200 வருடத்திற்கு முன்பு வறுமையிலிருந்துள்ளோம், கஷ்டப்பட்டுள்ளோம் என்பதை மையமாக வைத்து பா.இரஞ்சித் படம் இயக்கியுள்ளார். அதை ட்ரைலரில் பார்க்கும்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும், இந்த மாதிரி ஒரு சக்தி வாய்ந்த கதை மக்களிடம் ஜனரஞ்சகமாகப் போய்ச் சேரும்.

இந்த படத்தின் ட்ரைலரை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் அதில், ஜி.வி.பிரகாஷின் இசை சிறப்பாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது. இப்படத்தின் பாடலைவிட அதில் வரும் ஒவ்வொரு நோட்ஸையும் ரசித்துக் கேட்டேன். அவரும் இந்த படத்தில் ஒரு கதாநாயகன்தான். விருதுகள் எல்லாம் அவர் நிறைய வாங்கியுள்ளார். ஆனால், இந்தப் படத்திற்குப் பிறகு உலக அளவில் பெரிய ஆளாக மாறுவார் என்று தோன்றுகிறது. சொல்ல முடியாது அவரின் அங்கிள்-க்கு ஆஸ்கர் வந்ததுபோல் இவருக்கும் ஆஸ்கர் வரலாம். இது நடந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 

விக்ரம்

பா.இரஞ்சித் எனக்குப் பயங்கரமான படம், கதாபாத்திரம், கதையமைப்பு எல்லாம் கொடுத்தார். ஆனால், அதற்கு அவர் மிகவும் கஷ்டப்பட்டார், அதை என்னால் உணர முடிந்தது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு ஷாட்டுக்கும் என்ன பண்ணலாம் என்று தலையை பிச்சு கிட்டு உட்கார்ந்திருப்பார். அவரின் கிராஃப்ட்-டை தாண்டி, படப்பிடிப்பு தளத்தில் எங்களிடம் கனிவாகப் பேசுவார். ஆனால், அவர் பேச்சில் ஒரு சூடு வந்ததும் கடகட என்று பேசுவார். அவர் பேசுவதை எப்போது கேட்டாலும் உற்சாகமாக இருக்கும். இந்தப் படத்திற்குப் பிறகு, இதில் நடித்த அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் மாற்றம் இருக்கும். மேலும் அவர்கள் சிறந்த கலைஞராக மாறுவார்கள், அதற்காக நன்றி ரஞ்சித்” என்றார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.