Thangalaan Review: அரசியல் பேசும் மாய யதார்த்த சினிமா; மிரட்டுகிறதா விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணி?

1850-ம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டம் வேப்பனூர் கிராமத்தில் தன் மனைவி கங்கம்மா (பார்வதி) மற்றும் நான்கு பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் தங்கலான் (விக்ரம்). அக்கிராமத்தின் விவசாய நிலங்களை முறைகேடாகப் பிடுங்கி, தங்கலானின் குடும்பம் உட்பட அக்கிராமத்தினரை அடிமையாக்கி, உழைப்பை உறிஞ்சுகிறார் அவ்வூரின் மிராசுதார் (வேட்டை முத்துக்குமார்). இந்நிலையில், மைசூர் சமஸ்தானத்திலுள்ள கோலார் பகுதியில் தங்கம் வெட்டியெடுக்கும் வேலைக்கு, ஆசை வார்த்தைகளைக் காட்டி அக்கிராமத்தினரை அழைக்கிறார் பிரிட்டிஷ் அதிகாரி கிளமண்ட் (டேனியல் கால்டகிரோன்).

Thangalaan Review | தங்கலான் விமர்சனம்

மிராசிடமும், ஆதிக்கச் சாதியினரிடமும் அடிமைப்பட்டுக் கிடப்பதைவிட, பிரிட்டிஷ் அதிகாரியின் பேச்சைக் கேட்கலாம் என முடிவு செய்யும் தங்கலான் தலைமையிலான கிராமத்தினர், கோலாருக்குப் பயணமாகிறார்கள். அதே சமயம் அங்கே கொடுமைக்கார சூனியக்காரியான ஆரத்தி (மாளவிகா மோகனன்) உலவுகிறாள், அவளால் உயிருக்கே ஆபத்து வரலாம் என்கிற நம்பிக்கையும் அங்கே நிலவுகிறது. இந்தப் பயணத்தில் அவர்களுக்குத் தங்கம் கிடைத்ததா, இப்பயணம் அம்மக்களின் வாழ்கையை எப்படி மாற்றுகிறது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது பா.இரஞ்சித்தின் ‘தங்கலான்’.

பாசக்காரத் தந்தையாக, காதல் கணவனாக, அக்கிராமத்தின் ஹீரோவாக என ஒரு டெம்ப்ளேட் கதாநாயகனின் வேடம்தான். ஆனால், உணர்வுபூர்வமான இடங்களிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் தன் தனித்த உடல்மொழியாலும் பேச்சாலும் அக்காலத்தைச் சேர்ந்த ‘தங்கலானுக்கு’ மிரட்டலாக உயிர் கொடுத்திருக்கிறார் விக்ரம். ஒவ்வொரு காட்சியிலும் அவரின் உழைப்பையும், மெனக்கெடலையும் உணர முடிகிறது. ஆனால், மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் வரும் விக்ரம்களுக்கிடையே எந்த வேறுபாட்டையும் பார்க்க முடியாதது சறுக்கல். விக்ரமோடு நடிப்பில் சரிசமமாக மோதுகிறார் பார்வதி. கோபம், ஆக்ரோஷம், அழுகை என எல்லா உணர்வுகளையும் நுணுக்கமாக அணுகி, அக்கதாபாத்திரத்தைத் தனித்துத் தெரிய வைக்கிறார். டேனியல் கால்டகிரோனும், ஆனந்த் சாமியும் மிரட்டல், வஞ்சகம் என இரண்டு லேயரிலும் அழுத்தமாக நிற்கிறார்கள்.

ஆக்ரோஷமான ஆக்‌ஷன் வில்லியாகச் சண்டைக் காட்சிகளிலும், மிரட்டல் காட்சிகளிலும் நியாயம் செய்திருக்கிறார் மாளவிகா மோகனன். பசுபதி, ஹரிகிருஷ்ணன் இருவரும் தங்களின் நடிப்பால் தங்கலானுக்குத் துணை நிற்கிறார்கள். முக்கியமாக, பசுபதியின் நையாண்டி சில இடங்களில் இறுக்கத்தைத் தளர்த்துகிறது. பிரீத்தி கரணும், கிரிஷ் ஹாசனும் அக்கதாபாத்திரங்களுக்குத் தேவையான குறைவில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

Thangalaan Review | தங்கலான் விமர்சனம்

க்ளோஸ் அப் ஷாட்களிலும், லாங் ஷாட்களிலும் சின்ன சின்ன புதுமைகளைப் புகுத்தி, அக்காலத்தைக் கண் முன் கொண்டுவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏ.கிஷோர் குமார். முக்கியமாகச் சண்டைக்காட்சிகளில் கிஷோரின் கை ஓங்கியிருக்கிறது. செல்வா ஆர்.கே-வின் படத்தொகுப்பு முதற்பாதிக்கான திரைமொழிக்குப் பொருந்திப்போவதோடு, வலுவும் சேர்த்திருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் நிதானம் மிஸ் ஆவதால், உணர்வுபூர்வமான காட்சிகள் கடகடவென ஓடிவிடுகின்றன. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் எல்லா பாடல்களும் கதைக்கு ஆழம் சேர்த்திருக்கின்றன. பின்னணி இசையிலும் இசை அசுரன் ‘தங்கமாகவே’ ஜொலிக்கிறார். அதேநேரம், சில காட்சிகளில் பின்னணி இசையானது இசை திணிப்பாக மாறி, இரைச்சலாகத் தொந்தரவும் தருகிறது. ஆங்காங்கே தலைதூக்கும் மேற்கத்திய இசையையும் தவிர்த்திருக்கலாம்.

கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி, ஆடை வடிவமைப்பாளர்களான ஏகன் ஏகாம்பரம், அனிதா சுதர்சன் ஆகியோரின் உழைப்பு, அக்காலத்திற்கே நம்மைக் கூட்டிச்செல்கிறது. `ஸ்டன்னர்’ சாமின் சண்டை இயக்கமும் கவனிக்க வைக்கிறது. கருஞ்சிறுத்தை, பாம்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மிகவும் மேம்போக்கான வரைகலை காட்சிகள் பெரிய மைனஸ்.

Thangalaan Review | தங்கலான் விமர்சனம்

1800களில் வட ஆற்காடு பகுதியைச் சேர்ந்த ‘தங்கலானின்’ ஆதிக்குடி, கோலார் தங்கச் சுரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட வரலாற்றையும் அதன் அரசியலையும் பேசுகிறது படம். அதற்காக அம்மக்களின் நாட்டார் மற்றும் வாய்வழிக் கதைகளோடு, ஃபேன்டஸி மற்றும் மாய யதார்த்தவாத காட்சிகளையும் இணைத்து சுவாரஸ்யமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். கோலார் போன்ற இந்நிலத்தின் வளங்களானது, அம்மண்ணின் உரிமையாளர்களும் அந்நிலத்தில் உழைப்பைக் கொட்டியவர்களுமான பூர்வகுடி மக்களுக்கே சொந்தமானது என்பதை அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் பதிய வைக்க முயல்கிறது திரைக்கதை. ஆனால், இதில் பாதி பாதையை மட்டுமே கடந்திருக்கிறது தமிழ்ப்பிரபா, பா.இரஞ்சித், அழகிய பெரியவன் ஆகியோரை உள்ளடக்கிய எழுத்துக் கூட்டணி.

Thangalaan Review | தங்கலான் விமர்சனம்

முதற்பாதியில் 1800களின் வேப்பனூர் கிராமம், இந்தியச் சாதியமைப்பின் கோர முகம், பிரிட்டிஷ் – மிராசுதாரின் உறவு போன்றவை நிதானமான காட்சிகளாகவும், அரசியல் குறியீடுகளாகவும் சுவாரஸ்யமாகவே தொடங்குகின்றன. இதற்குப் பயன்படுத்தப்பட்ட திரைமொழியும், வாய்வழி கதை ஒன்றைப் பின்கதையாக விவரித்த விதமும் சபாஷ் போட வைக்கின்றன. நாட்டார் கதையைப் படத்தின் சமகால கதையோடு இணைத்த விதம், தங்கத்தைத் தேடும் முதற்கட்ட பயணங்கள், அதன் ஆபத்துகள், நடிகர்களின் நடிப்பு போன்றவை முதற்பாதியை முழுக்கவே ஒரு நல்ல திரையனுபவமாக மாற்றியிருக்கின்றன. ஆனால், ‘லைவ் சின்க்’ முறையில் பதிவு செய்யப்பட்ட வசனங்கள் பெரும்பாலும், தெளிவில்லாமல் இருப்பதால் திரையிலிருந்து விலக வைக்கிறது. இப்பிரச்னை வசனங்கள் நிறைந்த இப்படத்திற்குப் பெரிய மைனஸாகவே மாறியிருக்கிறது.

அரசியல், மாய யதார்த்தவாதம், புனைவு, வரலாறு, தங்கலான் கதாபாத்திரத்தின் மனவோட்டம் போன்ற பல அடுக்குகளை இணைக்கும் பணியில் இரண்டாம் பாதியின் திரைக்கதையும் சறுக்குகிறது. உணர்வுபூர்வமான காட்சிகளில் நிதானமில்லாமல் போனது, கதைக்குத் தேவையான சில வரலாற்றுத் தகவல்களை வசனங்களிலேயே கடத்தியது, தங்கலான் கதாபாத்திரத்தின் மனவோட்டத்தை அளவிற்கு மீறி இழுத்தது, தெளிவில்லாத வசனங்கள் என முதற்பாதி சேர்த்து வைத்த தங்கம் சிறிது சிறிதாக இதில் கரைந்து போகிறது. இந்தப் பரபரப்பால் இறுதிக்காட்சிக்கு முந்தைய பின்கதை வெறும் ட்விஸ்ட்டாக மட்டுமே தொக்கி நிற்கிறதே தவிர, அரசியலாக மனதில் நிற்கவில்லை. படத்தின் ஆன்மாவைப் பேசும் அப்பகுதியை இன்னும் ஆழமாகவும், நெருக்கமாகவும் எழுதி, திரையில் ஏற்றியிருக்கலாம்.

Thangalaan Review | தங்கலான் விமர்சனம்

புத்தர் சிலை, அதைக் கதையின் மையத்திற்குப் பயன்படுத்தியது, அப்போதைய காலகட்டத்திலிருந்த பிராமணியத்திற்கும் பௌத்தத்திற்குமான மோதல், பிராமணர்களுக்குக் கொடுக்கப்படும் பிரம்மதேய தானம், அக்காலகட்டத்தில் இந்து மதத்திற்குள் ராமானுஜர் செய்த பணிகள், நடுக்கல் வழிபாடு, ரயத்துவாரி வரி எனப் பல அரசியல் மற்றும் சமூகக் குறியீடுகள் படத்தில் நிறைந்திருக்கின்றன. அவற்றுக்குப் பாராட்டுகள் என்றாலும், அவற்றில் சில மட்டுமே திரைக்கதைக்கு உதவியிருக்கின்றன.

முதல் பாதி தங்கமாக மின்ன… வரைகலை, ஒலியமைப்பு, குழப்பமான திரைமொழி ஆகியவற்றால் இரண்டாம் பாதி சற்றே ஒளி இழந்திருக்கிறது. ஆனாலும் `தங்கலான்’ பங்கமில்லாத திரையனுபவமே!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.