அன்று 'அண்ணாத்த', 'ஜெய்பீம்' இன்று 'வேட்டையன்', 'கங்குவா'! ரேஸில் முந்தப் போவது ரஜினியா ? சூர்யாவா?

இந்தாண்டு அக்டோபர் மாதம் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரொம்பவே சிறப்பான மாதம் எனலாம். ரஜினியின் ‘வேட்டையன்’, சூர்யாவின் ‘கங்குவா’, சிவகார்த்திகேயனின் ‘அமரன்’, ஜெயம் ரவியின் ‘பிரதர்’ என பெரிய படங்களின் ரிலீஸ் வரிசைகட்டி நிற்கின்றன.

இதில் ‘வேட்டையன்’, ‘கங்குவா’ இரண்டும் தீபாவளிக்கு முன்னரே வெளியாகின்றன. அதிலும் இரண்டும் ஒரே நாளில் வெளியாகும் என்கிறார்கள்.

ரஜினியுடன் த.செ.ஞானவேல்

சூர்யாவின் பட பட்ஜெட்டிலேயே பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருப்பது ‘கங்குவா’. இந்தப் படம் அறிவிக்கபடும் போதே, 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் என அறிவித்தனர். படத்தின் முன்னோட்ட வீடியோவும், சமீபத்தில் இயக்குநர் சிவாவின் பிறந்தநாளின் போது வெளியான ‘கங்குவா’ டீசரும் படத்தின் மேக்கிங்கை பற்றிய பிரமிப்பைக் கூட்டின. இந்நிலையில் ‘கங்குவா’வும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்டூடியோ க்ரீன் வெளியிடுகிறது.

சிவா, சூர்யா, டி.எஸ்.பி.

அதைப் போல, ரஜினியின் ‘வேட்டையன்’ படத்திற்கான எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது. சூர்யாவை வைத்து ‘ஜெய்பீம்’ இயக்கிய த.செ.ஞானவேலின் அடுத்த படமிது. ‘அதிகாரத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் மீதான அத்துமீறலைப் பதிவுசெய்ததோடு போராடி நீதியைப் பெறமுடியும் என்னும் நம்பிக்கையை விதைத்த படமாக ‘ஜெய்பீம்’ உருவாகியிருந்ததால், ரஜினி- ஞானவேல் கூட்டணியின் ‘வேட்டையன்’ படமும் சமூக அக்கறை பேசும் என எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது. தவிர படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா என மல்டி ஸ்டார்களின் கூட்டணியும் இருக்கிறது. இன்னொரு விஷயம் அக்டோபர் 10ம்தேதி வெளியாகும் என முதலில் அறிவித்த படம் ‘வேட்டையன்’ தான். லைகா தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் வெளியிடுகிறது.

கங்குவா

இப்படி இரண்டு படங்களுமே தனித்துவமாக மிளிர்கின்றன. ‘வேட்டையன்’, ‘கங்குவா’ இரண்டுமே தனித்தனியாக வெளியானால் தானே நிறைய ஸ்கீரின்களில் வெளியாகும். வசூலை குவிக்கும். அப்படியில்லாமல் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் கடும் மோதலாக இருக்குமே என நீங்கள் நினைப்பது சரிதான். ஆனால் இப்படி இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் போட்டியிடுவது தமிழ் சினிமாவிற்கு ஒன்றும் புதிதானதல்ல.

நிறைய போட்டிகளைச் சொல்ல முடியும். கடந்த 2023ல் விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ இரண்டும் ஒரே நாளில் தான் வெளியானது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இன்றைய சினிமாவின் பிசினஸ் ஏரியா என்பது உலகளாவியது. எனவே தமிழ்நாட்டில் மட்டுமல்ல இன்று உலகம் முழுவதும் தமிழ் படங்கள் வெளியாகின்றன. பேன் இண்டியா மார்க்கெட் வந்துவிட்டது. அதன்படி ‘வேட்டையன்’ தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகும் என்கிறார்கள். தெலுங்கில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் `தேவாரா’ திரைப்படமும் முன்கூட்டியே வெளியாகிறது என்பதால் அது இந்தப் படங்களுடனான ரேஸில் இருக்காது. அதேபோல ‘கங்குவா’ குறைந்த பட்சம் 20 மொழிகளில் வெளியாகிறது என்பதால் உலகெங்கும் உள்ள திரைகளில் ரிலீஸ் ஆவதால், பன்மடங்கு லாபத்தை எளிதாக ஈட்டிவிடலாம். தவிர, ஓடிடி வருமானமும் தனி என்பதால், வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி இரண்டு படங்களும் வரவேற்பை அள்ளும் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘வேட்டையன்’

இன்னொரு ஒற்றுமையான விஷயத்தைப் பார்க்கலாம். கடந்த 2021ல் சூர்யாவின் ‘ஜெய்பீம்’ வெளியான அதே வாரத்தில் தான் சிவாவின் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘அண்ணத்த’ வெளியானது. சூர்யாவின் படம் வெளியான அடுத்த ரெண்டு நாளில் ரஜினி படம் திரைக்கு வந்தது. அதே போல இப்போது சிவாவின் இயக்கத்தில் சூர்யாவும், த.செ.ஞானவேலின் இயக்கத்தில் ரஜினியும் என வேறு வேறு படங்களின் மூலம் சந்தித்துக் கொள்கிறார்கள். ஆக, ‘வேட்டையன்’, ‘கங்குவா’ இரண்டும் அக்டோபர் 10ம் தேதி டார்க்கெட் வைத்துள்ளதால், ரேஸில் யார் முந்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இரண்டு படங்களில் எந்தப் படத்தை எதிர்பார்த்து நீங்கள் காத்திருக்கிறீர்கள்?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.