ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதன்முறையாக… சுவீடனில் குரங்கம்மை பாதிப்பு

ஸ்டாக்ஹோம்,

குரங்கம்மை பாதிப்பு என்பது ஒரு வகை வைரசால் ஏற்பட கூடிய தொற்று நோய் ஆகும். ஆப்பிரிக்காவில் நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதுபற்றி ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், குரங்கம்மை பாதிப்பு பொது சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

அதனால், இதனை தடுத்து நிறுத்த சர்வதேச உதவி வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது. இந்த 13 நாடுகளில் காங்கோ நாட்டில் 96 சதவீதம் அளவுக்கு பாதிப்புகளும் மற்றும் மரணங்களும் ஏற்பட்டு உள்ளன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, காங்கோவில் பாதிப்புகள் 160 சதவீதமும், மரணங்கள் 19 சதவீதமும் உயர்ந்து உள்ளன.

இந்த பாதிப்புக்கு, நடப்பு ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை 524 பேர் பலியாகி உள்ளனர். 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என்றும் தெரிவித்து இருந்தது.

ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் இந்த புது வடிவிலான வைரசானது, காங்கோவில் இருந்து புரூண்டி, கென்யா, ருவாண்டா மற்றும் உகாண்டா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது. எனினும், ஆப்பிரிக்காவில் குறைந்த தடுப்பூசி டோஸ்களே இருப்பில் உள்ளன.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விசயம். இந்த வைரசானது ஆப்பிரிக்காவை கடந்து பரவ கூடிய ஆற்றல் படைத்துள்ளது என்பது அதிக வருத்தத்திற்குரியது என்று கூறினார்.

இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பு, குரங்கம்மையை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக அறிவித்தது. இந்நிலையில், ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதன்முறையாக சுவீடன் நாட்டில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வைரசானது, கிளாட் 1 என்ற வகையை சேர்ந்தது.

நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபரிடம் இருந்து எளிதில் தொற்றும் தன்மை கொண்டதுடன், அதிக ஆபத்து நிறைந்த ஒன்றாகவும் கூறப்படுகிறது. இதனை சுவீடன் நாட்டு அரசு நேற்று (வியாழக்கிழமை) அறிவித்து உள்ளது.

அந்நாட்டின் சுகாதார மற்றும் சமூக விவகார துறை மந்திரி ஜேக்கப் பார்ஸ்மெட் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, சுவீடனில் ஒருவருக்கு தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அது கிளாட் 1 என கண்டறியப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.

அந்த நபர் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டு விட்டு நாடு திரும்பியிருக்கிறார். இதில் அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஸ்டாக்ஹோம் நகரில் முதலில் அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. இதன் பின்பு சிகிச்சையும் வழங்கப்பட்டு உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.