“கட்டுக்கதைகளுக்கு இடமளிக்க நீதித்துறை அதிகாரமா?” – ராகுல் பேச்சுக்கு ஜக்தீப் தன்கர் எதிர்வினை

புதுடெல்லி: “நமது பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கிலான கட்டுக்கதைகளுக்கு இடமளிக்கும் வகையில், நீதித்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என அரசியல் சாசனப்பதவியில் இருப்பவர்கள் உச்ச நீதிமன்றத்திடம் கேட்பது மிகவும் கவலை அளிக்கிறது” என்று குடியரசு துணைத்தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் அறிவுசார் சொத்துரிமை சட்டம் மற்றும் மேலாண்மையில் முதுநிலை பட்டம் பெற்ற முதலாவது அணியினரிடையே உரையாற்றிய தன்கர், “சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை என எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும், அதற்கான செயல்பாட்டு வரம்பு இந்திய அரசியல் சாசனத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களுக்கான அதிகாரமும், வரையறுக்கப்பட்டுள்ளது. உலகில் எந்த நாடாக இருந்தாலும், அது அமெரிக்க உச்சநீதிமன்றமாக இருந்தாலும் சரி, இங்கிலாந்தில் உள்ள உச்சநீதிமன்றம், அல்லது வேறு எந்த வடிவிலானதாக இருந்தாலும் அங்கெல்லாம் தாமாக முன்வந்து வழக்குகளை எடுத்ததில்லை. அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள அம்சங்களைத் தாண்டி யாருக்கும் தீர்வு கிடைத்ததில்லை.

விசாரணை நீதிமன்ற வரம்பு, மேல்முறையீட்டு நீதிமன்ற வரம்பு போன்றவற்றிற்கு அரசியல் சாசனத்திலேயே வகை செய்யப்பட்டுள்ளது. மறு ஆய்வுக்கும் அதில் இடம் உள்ளது. ஆனால், நமது பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கிலான கட்டுக்கதை பற்றி தாமாக முன்வந்து விசாரிக்குமாறு, அரசியல் சாசனப் பொறுப்பில் உள்ள ஒருவர் கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டிருப்பதை அறிந்து நான் மிகவும் கவலையடைந்தேன்.

தேச நலனை விட சுயநலன் அல்லது பிரிவினைக்கு முன்னுரிமை அளிக்கும் சக்திகளை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும். இளைஞர்கள் குடிமைப்பணி மோகத்தை கைவிட்டு, வழக்கமான வேலைவாய்ப்புகளைத் தாண்டி புதிய மற்றும் பயனுள்ள வேலைவாய்ப்புகளை நாட வேண்டும்.

இந்தியா, தனது செழுமையான கலாச்சாரம் மற்றும் வரலாற்று பாரம்பரியம் காரணமாக அறிவுசார் சொத்துரிமை மிகுந்த தங்கச் சுரங்கம் போன்ற ஒரு நாடாக திகழ்கிறது. சர்வதேச வர்த்தகத்தில், அறிவுசார் சொத்துரிமை ஒரு முக்கிய அம்சமாக மாறியுள்ளது. நமது பண்டைக்கால வேதங்களில் காணப்படும் ஞானம், அறிவுசார் சொத்துரிமையின் சாராம்சமாக இருப்பதுடன், சமுதாய மேம்பாட்டிற்குத் தேவையான கருத்துக்கள் மற்றும் அறிவாற்றல் மிகுந்து காணப்படுகிறது” என தெரிவித்தார்.

ஜெக்தீப் தன்கர் பேச்சின் பின்னணி: அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டிய நிலையில், இந்த விவகாரம் குறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் சமூக வலைதளத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர், “இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி நடப்பதாக வைத்துக் கொள்வோம். போட்டியில் நடுவர் சமரசம் செய்கிறார் என்பது, போட்டியைப் பார்க்கும் ஒவ்வொரு நபருக்கும், போட்டியை விளையாடுபவர்களுக்கும் தெரிகிறது என்றால், அந்த போட்டி என்னவாகும்? போட்டியின் நேர்மை மற்றும் முடிவு என்னவாக இருக்கும்? போட்டியில் பங்கேற்கும் ஒருவராக நீங்கள் அதை எப்படி உணருவீர்கள்? இதுதான் இந்திய பங்குச்சந்தையில் நடக்கிறது.

செபி தலைவர் மாதாபி பூரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால், அதற்கு யார் பொறுப்பு? பிரதமர் மோடியா? செபி தலைவரா அல்லது கவுதம் அதானியா? கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இதனை விசாரிக்குமா?

சில்லறை முதலீட்டாளர்களின் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள செபியின் நேர்மை, அதன் தலைவர் மீதான குற்றச்சாட்டுகளால் கடும் கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் இவ்வளவு பயப்படுகிறார் என்பதும், அந்த விசாரணையில் என்ன தெரியவரும் என்பதும் இப்போது தெளிவாகத் தெரிகிறது” என தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.