கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல், பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான ஆவணங்களை அழிக்கும் முயற்சி என்று மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஆளுநர் ஆனந்த போஸ், “இந்தப் பிரச்சினையை காவல்துறை மிக மோசமாகக் கையாண்டுள்ளது. அங்கு (ஆர்.ஜி. கர் மருத்துவமனை) நடந்தது எந்த நாகரிக சமுதாயத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடிய ஒன்று. எந்தக் காவல் துறையும் இப்படி நடந்துகொண்டிருக்காது.
மருத்துவமனை மீதான தாக்குதலை காவல்துறை தடுத்திருக்க வேண்டும். அதற்கேற்ப போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணையை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், இவை எதுவும் நடக்கவில்லை. மருத்துவமனயில் நிகழ்ந்த மிக மோசமான குற்றத்தின் தடயங்களை அழிக்க யாரோ எங்கிருந்தோ முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது நன்றாக தெரிகிறது. மாணவியின் மரணம் தற்கொலையா என்ற சந்தேகத்தை எழுப்பியது யாரோ செய்த கேவலமான செயல். இது முழுக்க முழுக்க காவல்துறையினரால் தவறாக நிர்வகிக்கப்படுகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.
பின்னணி: கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர் (31), பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா போலீஸிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெண் மருத்துவரின் படுகொலையைக் கண்டித்து புதன் இரவு (ஆக. 14) கொல்கத்தாவில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, போராட்டக்காரர்கள் போல மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல், அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தியது. மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீதும், போலீஸ் வாகனங்கள் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் இதுவரை 19 பேரை கைது செய்துள்ளனர்.