செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதில் சிக்கல்: மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே தரப்பு வாதம்

சென்னை: பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தமிழர் தான் காரணம் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், “செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதில் சிக்கல்கள் உள்ளது,” என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே சார்பில் உயர் நீதீிமன்றத்தில் வாதிடப்பட்டது.

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே கருத்து தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மத்திய இணை அமைச்சரான ஷோபா கரந்தலஜே மீது இருபிரிவினரிடையே கலகத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, “ஷோபா கரந்தலஜே செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்கத் தயார்,” என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷோபா கரந்தலஜே சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “செய்தியாளர் சந்திப்பு நடத்தி இதுதொடர்பாக மன்னிப்பு கோருவதில் சில சிக்கல்கள் உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே ‘எக்ஸ்’ வலைதளத்தில் மன்னிப்பு கோரி விட்டார்” என தெரிவிக்கப்பட்டது.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரின் கருத்தைப் பெற்றே நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது” என கூறினார். அப்போது, ஷோபா கரந்தலஜே சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக விருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கு விசாரணையை நீதிபதி வரும் ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.