சென்னை: விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் 62-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னையிலும், நாளை (சனிக்கிழமை) புதுச்சேரியிலும் விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளான ஆகஸ்ட் 17-ம் தேதியை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகிறோம். அந்த வகையில் இந்த ஆண்டும் அவரது 62-வது பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, இன்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் மாலை 3 மணி அளவில் விழா நடைபெறவுள்ளது. முதலில் கானா இசைவாணி குழுவினரின் இசை விழா நடைபெறும். இதைத் தொடர்ந்து, ‘கோலோச்ச வா கொள்கை சிறுத்தையே’ என்ற தலைப்பில் முனைவர் அப்துல் காதர் தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. இதில், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வரவேற்புரையாற்றுகிறார்.
அம்பேத்கர் துணைக்கோல் ஏந்தி, அயோத்திதாசர் எழுதுகோல் தூக்கி, பெரியார் கைக்கோல் ஓங்கி ஆகிய தலைப்புகளின் கீழ் கவிஞர்கள் அருண்பாரதி, தனிக்கொடி ஜீவா, வழக்கறிஞர் சினேகா ஆகியோர் உரையாற்றுகின்றனர். பின்னர், கலைமாமணி ஜாஹிர் உசேன் குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் வாழ்த்தரங்குக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையேற்கிறார். விசிக பொதுச்செயலாளர்கள் ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ, துரை.ரவிக்குமார் எம்.பி., எம்எல்ஏ-க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திரைப்பட இயக்குநர்கள் ராஜ்கிரண், லட்சுமி ராமகிருஷ்ணன், பட்டிமன்ற பேச்சாளர் நீலவேணி முத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
இரவு 9.30 மணிக்கு ஊடகவியலாளர் ரபி பெர்னார்ட் விசிக தலைவருடன் நடத்திய நேர்காணல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பின்னர் விசிக மாநில கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கு முதன்மையான காரணம் எழுச்சித்தமிழரின் அயராத உழைப்பா? அரசியல் உத்தியா? என்ற தலைப்பின் கீழ் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதில், பேராசிரியர் சுந்தரவள்ளி, கவிஞர் நந்தலாலா, பூபாளம் பிரகதீஸ்வரன், ஊடகவியலாளர் இந்திரகுமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இரவு 11 மணிக்கு விடுதலை நாயகன் ஆவணப்படம் வெளியிடப்படும். இறுதியாக இரவு 11.30 மணிக்கு விசிக தலைவர் திருமாவளவன் ஏற்புரையாற்றுகிறார். விழாவை முதன்மைச் செயலாளர் ஏ.சி.பாவரசு, தலைமை நிலையச் செயலாளர்கள் தகடூர் தமிழ்ச்செல்வன், இளஞ்சேகுவாரா, அ.பாலசிங்கம், செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலன் மற்றும் சென்னை மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைக்கின்றனர். ஊடகவியலாளர் ராஜ்மோகன் தொகுத்து வழங்குகிறார்.
விழாவில், மது, மற்றும் போதை ஒழிப்பு கருப்பொருளை முன்வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கப்படும். இந்தளவில் சென்னையில் விழா முடிகிறது. இதைத் தொடர்ந்து, நாளை ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட விசிக சார்பில் மாலை 4 மணியளவில் புதுச்சேரி அருகேயுள்ள சங்கமித்ரா அரங்கில் விழா நடைபெறவுள்ளது.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வெ.வைத்திலிங்கம் எம்.பி., மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன்.கவுதம சிகாமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகின்றனர். நிறைவாக, கட்சியின் தலைவர் திருமாவளவன் ஏற்புரையாற்றுகிறார். அந்நிகழ்வில் கட்சி வளர்ச்சிக்கென 200 பவுன் பொற்காசுகளை விழுப்புரம் மாவட்டச் செயலாளர்கள் வழங்குகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.