மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி பெண் டாக்டர் (முதுநிலை மருத்துவ மாணவி) பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும், பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெறுகின்றன.
Live Updates
-
16 Aug 2024 12:26 PM GMT
பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவர் சுகந்த மஜூம்தார் தனது ஆதரவாளர்களுடன் கொல்கத்தாவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
-
16 Aug 2024 12:23 PM GMT
மருத்துவமனை மீதான வன்முறை தாக்குதல் தொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது. சமூக வலைத்தளம் வாயிலாக மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
-
16 Aug 2024 10:45 AM GMT
மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி
பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பயிற்சி பெண் டாக்டருக்கு நீதி கேட்டும், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தியும் கொல்கத்தாவில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி தொடங்கியது. இதில் ஏராளமானோர் பங்கேற்று, பதாகைகளை ஏந்தி வருகின்றனர்.
-
16 Aug 2024 9:39 AM GMT
பயிற்சி பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வந்தனர். வன்முறைக் கும்பலால் சேதப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு வழியாக மருத்துவமனைக்குள் நுழைந்த அவர்கள், விசாரணையை தொடங்கினர்.
-
16 Aug 2024 9:15 AM GMT
தலைநகரில் டாக்டர்கள் போராட்டம்
டெல்லி முழுவதும் உள்ள உறைவிட டாக்டர்கள் சங்கங்களைச் சேர்ந்த டாக்டர்கள் டெல்லி நிர்மாண் பவனில் கூட்டுப் போராட்டம் நடத்தினர்.
-
16 Aug 2024 8:20 AM GMT
கொல்கத்தா ஷியாம்பஜார் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
-
16 Aug 2024 8:01 AM GMT
தமிழகத்தில், நாகை மருத்துவக் கல்லூரி மாணவ- மாணவிகள் அமைதி ஊர்வலம் நடத்தினர். இதேபோல் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையின் டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
16 Aug 2024 7:56 AM GMT
சண்டிகரில் உள்ள பிஜிமர் மருத்துவமனையின் ஜூனியர் டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் பேரணி நடத்தினர்.
-
16 Aug 2024 7:55 AM GMT
மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணிநேரத்திற்குள் எப்.ஐ.ஆர். – மத்திய அரசு உத்தரவு
மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தாக்குதலுக்கு உள்ளானால் 6 மணிநேரத்திற்குள் எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்தும் மருத்துவ ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் நாடு முழுவதும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
16 Aug 2024 7:53 AM GMT
ஆந்திராவின் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜூனியர் டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் வீதி நாடகமும் நடத்தினர்.